பிரதமருக்கு எதிரான என் விமர்சனங்கள் தொடரும்! - பிரகாஷ் ராஜ்
பெங்களூர்: பிரதமர் மோடி மக்களின் பிரதிநிதி. கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் மீதான என் விமர்சனங்கள் தொடரும் என்று பிரகாஷ் ராஜ் கூறினார்.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரகாஷ் ராஜுக்கு நெருக்கமானவர் கௌரி லங்கேஷ்.

இந்த சம்பவத்தைக் கண்டுகொள்ளாமல் மோடி மௌனம் சாதிப்பதற்கு கண்டனம் தெரிவித்த பிரகாஷ் ராஜ், மோடியை கடுமையாக விமர்சித்தார். "கௌவுரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனத்தை கடை பிடிக்கிறார். அவர் என்னை விட மிகச் சிறந்த நடிகராக உள்ளார்," என்று பிரகாஷ் ராஜ் கூறியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மோடியை தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக கூறி லக்னோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் சனிக்கிழமை (7-ந்தேதி) நடக்கிறது.
இந்த நிலையில் தன் மீதான வழக்கை கண்டு பயப்பட போவதில்லை என்றும் தொடர்ந்து மோடி பற்றி பேசுவேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியொன்றில், "நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டின் பெரும்பாலான மக்களால் தேர்வான ஒரு தலைவர். இந்த நாட்டின் குடிமகன் மற்றும் நடிகர் என்ற முறையில் அவருடன் மாறுபட எனக்கு உரிமை உள்ளது.
அவர் கட்சியை சார்ந்தவர் அல்ல. மதச்சார்பற்ற நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர். ஜனநாயக நாட்டில் அவர் கௌரி கொலை விவகாரத்தில் மௌனமாக இருப்பதை பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் என்னால் அமைதியாக இருக்க இயலவில்லை.
நான் ஜனநாயகத்தை நம்புகிறேன். இந்த நாட்டில் நடப்பதில் இருந்து நான் பாடம் கற்றுள்ளேன். எனவே எனக்கு எப்போது, எங்கே அவசியம் என்று தோன்றுகிறதோ அப்போது நான் தொடர்ந்து பேசுவேன். என் மனதில் பட்டதை துணிந்து சொல்வேன். எனது கருத்தை வெளியிட உரிமையும், சுதந்திரமும் உள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications