அமர்நாத் பக்தர்களுக்கு ஆதரவாக பேசுவதாக கூறி ஹஜ் யாத்ரீகர்களை மிரட்டும் பெண் சாமியார் சாத்வி
முசாபர்நகர்: அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் தாக்குதலுக்குள்ளாக நேரிடும் என்று சர்ச்சைக்குரிய பெண் சாமியார் சாத்வி பிராச்சி மிரட்டல் விடுத்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருபவர் சாத்வி பிராச்சி. அந்த வகையில் தற்போது ஹஜ் யாத்ரீகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் நிகழ்ச்சி ஒன்றில் சாத்வி பிராச்சி பேசியதாவது:
அமர்நாத் செல்லும் பக்தர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களும் அதே போன்ற நிலைமையை எதிர்கொள்ள நேரிடும். இனி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் அதேபாணியில்தான் பதிலடி கொடுப்போம்.
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு மானியம் கொடுக்கப்படுகிறது.. ஆனால் அமர்நாத் செல்லும் பக்தர்களுக்கு வரி விதிக்கப்படுவது என்பது அவமானகரமானது.
இவ்வாறு சாத்வி பிராச்சி கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பாரதிய ஜனதாவோ அவர் எங்கள் கட்சியிலேயே இல்லை என்று பதிலளித்துள்ளது.












Click it and Unblock the Notifications