பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும்.. சொல்கிறார் அமீத் ஷா
ரக்ஸால், பீகார்: பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவினால் அதை பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். அந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது பீகார் வாக்காளர்களின் கடமையாகும் என்று பாஜக தலைவர் அமீத் ஷா கூறியுள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தல் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலை, பாகிஸ்தானுடன் தொடர்புப்படுத்திப் பேசியுள்ளார் அமீத் ஷா.
ரக்ஸால் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார்க கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது...

பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள்
பீகார் தேர்தலில் பாஜக தோல்வியுற்றால் அதை பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். அந்த நிலை நமது நாட்டுக்கு ஏற்பட வேண்டுமா? அப்படி ஏற்படாமல் தடுக்க வேண்டியது பீகார் வாக்காளர்களின் கடமையாகும்.

காட்டாட்சி மீண்டும் வேண்டுமா?
பீகாரில் இத்தனை காலம் இருந்த காட்டாட்சி போதும். மீண்டும் ஒரு காட்டாட்சி வேண்டுமா? பாஜக ஒரு வேளை தோற்றுப் போனால், அந்த வெற்றி, தோல்வி பீகாருடன் நிற்காது. பாகிஸ்தான் வரை கொண்டாட்டங்கள் நீளும். அந்த நிலையைத் தடுக்க வேண்டும்.

குண்டர்களுக்குக் கொண்டாட்டம்
ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகம்மது ஷஹாபுதீன் போன்ற குண்டர்கள் கொண்டாட்டமடைவார்கள். அந்த நிலை ஏற்படக் கூடாது.

இட ஒதுக்கீடு மாறி விடும்
ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார் அமீத் ஷா.

கஷ்டம்
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக எளிதாக வெல்லும் என்ற ரீதியில் முன்பு கருத்துக் கணிப்புகள் வந்தன. ஆனால் தற்போது பாஜக ஜெயிப்பது கஷ்டம் என்பது போல முடிவுகள் வருவதால் அமீத் ஷா இவ்வாறு பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications