பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் கொடூரம்?
அமராவதி: காதலை நிராகரித்ததால் 21 வயது நிரம்பிய இளைஞர் அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியின் முகத்தை 'செயின்ஷா' என அழைக்கப்படும் மின்சார ரம்பம் கொண்டு வெட்டிய கொடூர சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சம்பவத்தின் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு மண்டலில் மாவட்ட பரிஷத் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அய்யவரிபள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலையில் மாணவி வழக்கம்போல் பள்ளி சென்றார்.
அப்போது பள்ளிக்குள் 21 வயது இளைஞர் நுழைந்தார். அந்த நபர் தனது கையில் 'செயின்ஷா' என அழைக்கப்படும் மின்சார ரம்பத்தை கொண்டு சென்றார்.
பள்ளியில் தற்போது புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இதனால் அந்த இளைஞர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அவர் பள்ளியில் வேலை பார்க்க வந்த தொழிலாளி, மரத்தை வெட்டுவதற்காக 'செயின்ஷா' இயந்திரத்தை எடுத்து செல்வதாக நினைத்தனர்.
ஆனால் அந்த இளைஞர் 10ம் வகுப்பிற்குள் நுழைந்தார். கண்இமைக்கும் நொடியில் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து 15 வயது நிரம்பிய அய்யவரிபள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவியின் முகம், கழுத்து, வயிற்று பகுதிகளில் வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறியடித்து ஓடினர். ஆனால் அந்த இளைஞர் அசரவில்லை. மாணவியை தொடர்ந்து இயந்திரம் கொண்டு வெட்டினார்.
அப்போது இன்னொரு மாணவி, தாக்குதல் சம்பவத்தை தடுத்து சக தோழியை காப்பாற்ற முயன்றார். இளைஞரை தடுக்க முயன்றார். அப்போது அவர் மீதும் இளைஞர் இயந்திரம் கொண்டு வெட்டினார். அதன்பிறகு அந்த இளைஞர் 'செயின்ஷா' இயந்திரத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்.
மாணவிகள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து பிற மாணவர்கள், ஆசிரியர்கள், 2 மாணவிகளையும் மீட்டு ஆம்புலன்ஸில் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர செயலை செய்த 21 வயது இளைஞர் தப்பியோடியதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த இளைஞர் எதற்காக மாணவி கோபிகாவை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு வெட்டினார்? என்பது தெரியவில்லை. இருப்பினும் காதல் விவகாரம் அல்லது குடும்பத்தின் முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். இளைஞர் ஒருவர் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து 10ம் வகுப்பு மாணவியை 'செயின்ஷா' இயந்திரம் கொண்டு அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் ஆந்திரா மட்டுமின்றி மொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுபற்றி சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில், ''ராப்தாடு ஜில்லா பஞ்சாயத்து உயர்நிலை பள்ளியின் வகுப்பறைக்குள் 10ம் வகுப்பு மாணவி மீதான கொடூர தாக்குதல் என்னை நடுங்க வைத்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்து மாணவிகளை தாக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
காயமடைந்த மாணவியின் உடல்நலம் பற்றி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதோடு, மாணவிக்கு உயர் சிகிச்சைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அரக்கனை கைது செய்து மிக கடுமையான தண்டனையை வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
