டெல்லி சட்டசபை தேர்தல்: பாஜக- ஆம் ஆத்மி இடையேதான் போட்டி! சீனிலேயே காங். இல்லையாம்!!
டெல்லி: நாட்டின் தலைநகராக டெல்லியில் 15 ஆண்டுகாலம் ஆட்சி செலுத்திய காங்கிரஸ் கட்சி தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் போட்டியில் சுவடே இல்லாமல் துடைக்கப்பட்டுவிடும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாரதிய ஜனதா, ஆம்ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இண்டியாஸ்பென்ட் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

2013 தேர்தலில்...
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.-31, ஆம்ஆத்மி -28, காங்கிரஸ்-8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை நிச்சயம் பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

நவம்பர் கருத்து கணிப்பு
கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் ஆம்ஆத்மி கட்சிக்கு 17 இடங்களே கிடைக்கும் என்ற கூறப்பட்டு இருந்தது. ஒரே மாதத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு மீண்டும் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் காலி
காங்கிரஸ் கட்சியோ 5 முதல் 8 இடங்களே பெறும் என்று அனைத்து கருத்து கணிப்புகளிலும் கூறப்படுகிறது. இதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேதான் மீண்டும் நேரடி போட்டி நிலவுகிறது.

லோக்சபா தேர்தல் ஒப்பீடு
2013 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகளையும் 2014 லோக்சபா தேர்தலில் டெல்லி சட்டசபை தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது காங்கிரஸ் மரண அடி வாங்கும் என்றே கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு சரிவு
2013ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட லோக்சபா தேர்தலில் 12% வாக்குகளை காங்கிரஸ் இழந்துள்ளது. அதே நேரத்தில் 11% வாக்குகளை கூடுதலாக பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது. அதாவது 2013 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28% வாக்குகளைப் பெற்றது. ஆனால் லோக்சபா தேர்தலில் 16% ஆக குறைந்து போனது.

பாஜகவுக்கு ஆதாயம்
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் 2013-ல் 38% ஆக இருந்த வாக்கு வங்கி லோக்சபா தேர்தலில் 49% ஆனது. அதே போல் ஆம் ஆத்மி 34% வாக்குகளை சட்டசபை தேர்தலிலும் 35% வாக்குகளை லொகபா தேர்தலிலும் பெற்றிருக்கிறது.
தொகுதிகள் அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் தனது வாக்கு வங்கியை இழந்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவுக்கு 64 தொகுதிகளில் வாக்கு வங்கி சதவீதம் அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மிக்கு 39 தொகுதிகளில் செல்வாக்கு இழந்தாலும் 31-ல் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

பாஜக வெல்லும்?
ஆகையால் டெல்லியைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் சரிவால் பாரதிய ஜனதா கட்சி இம்முறை கூடுதல் இடங்களைப் பெறுவது உறுதியாகி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications