உயிரை பணயம் வைத்து பொதுத்தேர்வுக்கு ‛பிட்’.. பாஜக ஆளும் ஹரியானாவில் ஷாக்.. பரவும் வீடியோ
சண்டிகர்: ஹரியானாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏராளமானவர்கள் பள்ளி சுவர் மீது ஏறி காப்பியடிக்க ‛பிட்' வழங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இவரது அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக கன்வார் பால் பொறுப்பு வகித்து வருகிறார். ஹரியானாவில் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

கடந்த மாதம் 27 ம் தேதி தொடங்கிய இந்த தேர்வு வரும் 26ம் தேதி வரை ஒருமாதம் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 27 ம் தேதி மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது.
இந்த தேர்வை முறைகேடு இன்றி, அமைதியான முறையில் நடத்தி முடிக்க அரசு சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இந்த பறக்கும்படையின் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தற்போது அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உயிரை பணயம் வைத்து உறவினர்கள் பள்ளியின் சுவர் மீது ஏறி ஜன்னல் வழியாக காப்பியடிக்கும் வகையில் ‛பிட்' வழங்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
हरियाणा के नूह में बोर्ड परीक्षा के दौरान...#boardexam #Haryana pic.twitter.com/GCFOObE61a
— Versha Singh (@Vershasingh26) March 6, 2024
அதாவது பள்ளியின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி ஜன்னலில் இருக்கும் துளைகள் வழியாக மாணவ -மாணவிகளுக்கு ‛பிட்' வழங்கி உள்ளனர். சிலர் கயிற்றின் உதவியோடு சுவர் மீது ஏறி ‛பிட்' வழங்கி உள்ளனர். இந்த சம்பவம் ஹரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த மாவட்டத்தின் எந்த பள்ளியில் இத்தகைய தேர்வு முறைகேடு நடந்தது என்பது தெரியவில்லை.
இந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி நூ மாவட்ட கல்வித்துறை அதிகாரி பரம்ஜித் சஹாலிடம் கேட்டபோது, ‛‛மாவட்டத்தில் தேர்வு முறைகேடு தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications