இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்...அதிகாரப் பரவலாக்கத்தை காங். ஏற்கிறது:"திராவிட" குரலில் ராகுல் காந்தி
ஐஸ்வால்: இந்தியா ஒரு நாடு அல்ல.. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்; அதிகாரப்பரவலாக்கத்தையே காங்கிரஸ் விரும்புகிறது; பாஜகவோ அதிகாரத்தை டெல்லியில் குவிக்க நினைக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: மாநிலங்களின் ஒன்றியம்: இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து மதங்களும், கலாச்சாரங்களும், வரலாறுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நாட்டின் அடித்தளத்தை அமைக்க காங்கிரஸ் உதவியது, அந்த அடித்தளத்தை பாதுகாத்து சாதனை படைத்துள்ளோம். நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே காங்கிரஸின் தொலைநோக்கு பார்வை ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தமோ, டெல்லியில் அதிகாரத்தை மையப்படுத்தி அனைத்து முடிவுகளையும் மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்பதாகும்.

5 மாநில தேர்தல்: நாங்கள் இந்தியாவின் மதிப்புகளைப் பாதுகாப்போம். இந்திய அரசியலமைப்பை பாதுகாப்போம். இந்தியா என்ற எண்ணத்தை பாதுகாப்போம். தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறப் போகிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்காக பாடுபடுகிறது. ராஜஸ்தான் சிறந்த சுகாதாரக் கொள்கையைக் கொண்டுள்ளது.
கர்நாடகா ஒப்பிடமுடியாத சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. அதே சமயம் சத்தீஸ்கர் வலுவான கொள்கைகளுடன் தொழில் முனைவோரை ஆதரிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஊழல் நிறைந்த பாஜக அரசை அகற்றுவோம். தெலுங்கானாவில் மகத்தான வெற்றியை எங்கள் 6 தேர்தல் வாக்குறுதிகள் உறுதி செய்யும்.
மணிப்பூர் ஏன் போகலை?: இந்திய பிரதமர் ஏன் இன்று வரை மணிப்பூர் செல்லவில்லை என்று? எனக்கு இன்னமும் புரியவில்லை... என்னால் பதில் சொல்ல முடியாத புதிராக உள்ளது. அவர் நம் நாட்டின் பிரதமர். ஒரு மாநிலம் 4 மாதங்களுக்கும் மேலாக எரிகிறது. அதன் மீது அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று
அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications