ஷீனாபோரா கொலை வழக்கு... இந்திராணி முகர்ஜி உட்பட 3 பேரின் போலீஸ் காவல் செப். 5 வரை நீட்டிப்பு
மும்பை : இளம் பெண் ஷீனா போரா கொலையில் தொடர்புடைய அவரது தாய் இந்திராணி முகர்ஜி உட்பட 3 பேரின் போலீஸ் காவல் வரும் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
மகள் காதல் விவகாரத்தில் கொலை செய்த பிறகு, மகன் மிக்கேல் போராவையும் ஆள் மூலம் விஷம் கொடுத்து தீர்த்துக்கட்ட தாய் இந்திராணி முகர்ஜி திட்டமிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஸ்டார் இந்தியா தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவருடைய மனைவி இந்திராணி. இவர் 9 எக்ஸ் மீடியா என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர்.
இந்திராணி 2012-ம் ஆண்டு அவருடைய தங்கை ஷீனா போராவை கொலை செய்து மும்பையை அடுத்த ராய்காட் காட்டுப்பகுதியில் வீசியதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்திராணியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஷீனா போராவை தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். முதலில் கொலையான ஷீனா போரா தனது தங்கை என்று கூறிய இந்திராணி, போலீசாரின் தீவிர விசாரணையில் தான் பெற்றெடுத்த மகள் என்ற அடுத்த குண்டை தூக்கி போட்டார்.
பீட்டர் முகர்ஜிக்கும், இந்திராணிக்கும் 2002-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. பீட்டர் முகர்ஜி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு முதல் மனைவி மூலம் ராகுல் என்ற மகன் உள்ளார். இதேபோல இந்திராணியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஷீனா போரா என்ற மகளும், மிக்கேல் போரா என்ற மகனும் உள்ளனர்.
ஆனால் இந்திராணி தனக்கு ஏற்கனவே ஆன திருமணத்தையும், அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பற்றிய தகவல்களையும் பீட்டர் முகர்ஜியிடம் மறைத்து விட்டார். மகள் ஷீனா போராவை தங்கை என்றும், மகன் மிக்கேல் போராவை தம்பி என்றும் கூறியுள்ளார். இதனிடையே 2007-ம் ஆண்டு கணவன்-மனைவி இருவரும் 9 எக்ஸ் மீடியா என்ற தனியார் தொலைக்காட்சியை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராகுலுக்கும், ஷீனா போராவுக்கும் காதல் மலர்ந்தது. இந்த முறையற்ற காதலை இந்திராணி எதிர்த்தார். ஆனால் மகள் கேட்காததால் இந்திராணி பெற்ற மகள் என்றும் கூட பாராமல் ஷீனா போராவை கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பின்னர் டிரைவர் ஷாம் மனோகர் ராய் உதவியுடன் மகளின் எரிந்த உடலை ராய்காட் காட்டுப்பகுதியில் வீசினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று போலீசார் விசாரணையில் வெளியாகியுள்ளது. இந்திராணி கவுஹாத்தியில் வசித்து வந்த தனது மகன் மிக்கேல் போராவையும் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
இதற்காக கவுஹாத்தியை சேர்ந்த ஒருவரை நியமித்துள்ளார். அந்த நபர், மிக்கேலுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்கு மற்றொருவரை நியமித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், மிக்கேல் பிழைத்துக்கொண்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஷீனா போரா கொலை வழக்கில், கைதான பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணியும், அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் ஓட்டுநர் ஷ்யாம் ராஜ் ஆகியோர், நேற்று முதன்மை அமர்வு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். போலீஸ் காவலை நீட்டிக்கக் கோரி காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மூவருக்கும் வரும் 5 ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications