பணக்கார வேட்பாளர்கள் அபார வெற்றி.. குறைந்த சொத்துடைய வேட்பாளர் பரிதாப தோல்வி.. நிலைமைய பாருங்க!
போபால்: மத்திய பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட டாப் பணக்கார வேட்பாளர்கள் அனைவரும் வென்றுள்ளனர். மிகக் குறைவான சொத்துகளைக் கொண்ட வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 77.15 சதவீத வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்தனர். முன்னதாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவர்கள் குறிப்பிட்ட சொத்து மதிப்பு விபரங்கள் தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது.

தேர்தல்களைப் பொறுத்தவரை, பணம் செலவழிப்பது அத்தியாவசியமாகிவிட்டது. வாக்காளர்களுக்கு ஆயிரக் கணக்கில் பணம் கொடுப்பதும், பரிசுப் பொருட்கள் கொடுப்பதும், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுச் செய்யும் வேலை ஆகி விட்டது. இதனால், அதிக பணம் செலவு செய்பவரே வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர் என்ற நிலை உள்ளது. மத்திய பிரதேச தேர்தலிலும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் ரத்லம் நகர் தொகுதி வேட்பாளர் சேதன்யா காஷ்யப் பையாஜி தான், மத்திய பிரதேச மாநிலத்தின் பணக்கார எம்.எல்.ஏவாக உள்ளார். 2018ல் ரூ.204 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு 2023ல் ரூ.91.4 கோடி அளவில் உயர்ந்து ரூ.296 கோடியாக அதிகரித்துள்ளது. இவர் சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
பாஜகவின் விஜயராகவ்கர் தொகுதி எம்எல்ஏ சஞ்சய் சத்யேந்திர பதக், ரூ.240 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை அதிக வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாஜகவின் குரை தொகுதி எம்.எல்.ஏ பூபேந்திர சிங் உள்ளார். இவரும் 25 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
ராய்கானைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கல்பனா வர்மா 2023 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே மிகக் குறைந்த சொத்துகளைக் கொண்டுள்ளார். இவர் ரூ. 33.65 லட்சம் மதிப்புடைய மொத்த சொத்துக்களை தேர்தல் கணக்கில் காட்டியுள்ளார். இவர் பாஜக வேட்பாளர் ப்ரதீபா பாக்ரியிடம் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
