“பூமராங்” ஆன ஆபரேசன் தாமரை.. பாஜகவில் வெடித்த சீனியர் VS ஜூனியர் மோதல்! 2024 தேர்தலில் புது டென்சன்
கவுஹாத்தி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அசாமில் பாஜகவுக்கு உட்கட்சிப் பூசல் பெரிதாக வெடித்து கிளம்பி இருக்கிறது.
பாஜக பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை ஆபரேசன் தாமரை மூலமாக குதிரை பேரம் செய்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இதற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, அருணாசல பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களே உதாரணம்.

இதேபோல் பல மாநிலங்களில் பாஜகவில் இருக்கும் நிர்வாகிகள் பலர் முன்பு காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளில் அங்கம் வகித்தவர்கள்தான். பாஜகவின் தற்போது பூதாகரமான வளர்ச்சிக்கு காரணமாக சொல்லப்படும் ஆபரேசன் தாமரையே தற்போது அக்கட்சிக்கு எதிராக திரும்பத் தொடங்கி உள்ளது.
பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படுவதாகவும், காலம் காலமாக பாஜகவில் அங்கம் வகித்தவர்கள் ஓரம்கட்டப்படுவதாக மூத்த பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். கர்நாடகா தேர்தலில் இந்த பிரச்சனை எதிரொலித்த நிலையில் தற்போது அசாமில் இது பூதாகரமாகி உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு அசாமில் மக்களவைத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே வென்ற பாஜக, தற்போது 12 முதல் 14 இடங்களை வெல்லும் அளவுக்கு வலுவடைந்து இருக்கிறது என்றால் அதற்கு பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்ததும் முக்கிய காரணம். ஆனால் இதுவே அசாமில் அக்கட்சிக்கு சிக்கலாக மாறி இருக்கிறது.
அசாம் முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மாவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்தான். இந்த நிலையில் பல ஆண்டுகளாக பாஜகவில் அங்கம் வகித்து வரும் இந்துத்துவ கொள்கையில் பிடிப்பு கொண்ட அசாம் மாநில நிர்வாகிகள், புதியவர்கள், கட்சி தாவியவர்களால் தாங்கள் ஓரம்கட்டப்பட்டு இருப்பதாக கருதுகின்றனர்.
புதிதாக கட்சிக்கு வந்தவர்கள் கொள்கையில் உறுதியின்றி இருப்பதாக கூறும் அவர்கள், அத்தகையவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்கள். இதன் காரணமாக பாஜகவை வைத்து பல சீனியர் நிர்வாகிகள் ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தொகுதி மறு சீரமைப்பு மற்றும் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் செய்யப்பட்ட தொகுதி மாற்றங்களின் காரணமாக மூத்த பாஜக நிர்வாகிகள் வெற்றி பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடந்த வாரம் அசாம் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜன் கொஹெய்ன் தான் வகுத்து வந்த அசாம் உணவு மற்றும் பொது விநியோகத்துறை கார்ப்பரேசனின் தலைவர் பதவியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் 4 முறை போட்டியிட்ட நாகான் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் குளறுபடி இருப்பதாக இவர் போர்க்கொடி தூக்கினார். அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு இது பற்றி அவர் கடிதமும் அனுப்பினார். இது தொடர்பாக கடந்த 25 ஆம் தேதி அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் தனது ராஜினாமாவை திரும்பப்பெறுவதாக அறிவித்த அவர், "எனது கோரிக்கைகளை அமித்ஷாவிடம் தெரிவித்தேன். அவர் எனது கவலைகளை புரிந்துகொண்டார்." என்றார். 72 வயதான கொஹைன் பாஜகவின் ஆரம்பகால தொண்டர். அசாமில் அக்கட்சி வளர முக்கிய காரணமாக அமைந்தவர்.
"முதலமைச்சர் ஹிமந்தாவிடம் பல முறை பேசியும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக எந்த பிரதிபலனையும் பார்க்காமல் கட்சிக்காக பாடுபட்ட மூத்த நிர்வாகியான எனது குரல் சொந்த கட்சியாலேயே கேட்கப்படாததால் துரோகம் செய்யப்பட்டதாக, அவமதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்." என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி அசாமில் 19 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிகளின் பெயர்களை மாற்றுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது பாஜகவிற்கு உள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியது. கிழக்கு கவுஹாத்தி தொகுதி மறுசீரமைப்பும் சீனியர் பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications