ஓரங்கட்டப்படுகிறாரா அருண் ஜெட்லி?
-ஆர் மணி
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2000 - 2013 ம் ஆண்டு காலத்தில் டில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அருண் ஜெட்லி அப்போது நடைபெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் சம்மந்தமாக இப்போது மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறார். இந்திய தலைநகரத்தின் கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பதிலும், இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றியவர் அருண் ஜெட்லி. தற்போது வெடித்துக் கிளம்பியுள்ள விவகாரம், அந்த 13 ஆண்டு காலத்தில், குறிப்பாக டெல்லி பெரோஷா கோட்லா மைதானம் கட்டுவதற்காக செவிடப்பட்ட 900 கோடிக்கும் மேற்பட்ட தொகையில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்பதுதான். இது தவிர அந்த 13 ஆண்டு காலத்தில் டெல்லி கிரிக்கெட்டுடன் தொடர்புடைய பல வேலைகளில் போலி கம்பெனிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைக் கொடுத்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் கடந்த வாரம், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ சோதனைகளை மேற்கொண்ட பிறகு வெடித்துச் சிதறியது. கெஜ்ரிவாலின் தனிச் செயலரான ராஜேந்திர குமாரை குறிவைத்து சிபிஐ சோதனைகளை நடத்தியது. குமாரையும் ஒன்பது மணி நேரம் விசாரணைக்காக சிபிஐ அழைத்துச் சென்றது. குமார் மத்திய அரசுப் பணியில் இதற்கு முன்பு இருந்த போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் சம்மந்தமான விசாரணை இது என்கிறார் அருண் ஜெட்லி. ஆனால் பதவியிலிருக்கும் ஒரு முதலமைச்சரின் அலுவலகத்திலேயே சிபிஐ விசாரணை நடத்துவதென்பது சுதந்திர இந்திய வரலாறு காணாத சமாச்சாரம்.
‘இந்த சோதனையென்பது அருண் ஜெட்லி சம்மந்தமான டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி அழிப்பதற்கான நடத்தப்பட்டதுதான்' என்கிறார் கெஜ்ரிவால். இதற்கு அடுத்து ஒரு படி மேலே போனார் கெஜ்ரிவால். டில்லி கிரிக்கெட் சங்க ஊழல் சம்மந்தமாக விசாரிப்பதற்காக ஒரு நபர் விசாரணை கமிஷனையும் அமைத்தது டெல்லி அரசு. முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையிலான இந்த கமிஷனுக்கு அருண் ஜெட்லி உரிய ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் பேசியிருப்பது, அருண் ஜெட்லியை அதிகமாக சீண்டி பார்க்கும் வேலைதான்.
மறுபுறம், கெஜ்ரிவால் மற்றும் ஆறு ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீது பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அருண் ஜெட்லி டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இது தவிர இவர்கள் அனைவர் மீதும் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகளையும் ஜெட்லி தாக்கல் செய்து விட்டார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தை ஏதோ அர்விந்த் கெஜ்ரிவால் வெளியில் கொண்டு வந்ததாக நினைத்தால் அது தவறு. பாஜக வைச் சேர்ந்த பிஹார் மாநில எம்பி கீர்த்தி ஆசாத்தான் இந்த ஊழல் விவகாரம் வெளியில் வர முக்கிய சூத்திரதாரியாவார்.
கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக, ஆம், 2006 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஆசாத் எழுதியும், பேசியும் வருகிறார் என்பதுதான் முக்கியமானது. பல போலி நிறுவனங்களுக்கு 90 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தப் புள்ளிகள் கொடுத்ததற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார் ஆசாத். அவரது முக நூல் மற்றும் வலைப் பக்கத்திலும் இவற்றை அவர் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக அருண் ஜெட்லியை குற்றம் சாட்டாமல் சாதுர்யமாக தப்பித்துக் கொண்டிருக்கும் ஆசாத், சுற்றி வளைத்து, மீண்டும், மீண்டும் ஜெட்லி மீதே தனது குற்றச்சாட்டுகளின் மையப் புள்ளி அகலாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது.
டிசம்பர் 21 ம் தேதி மக்களவையில் இந்த விவகாரம் எழுப்பபட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதில் ஆசாத்தை உசுப்பி விடும் விதத்தில் ஜெட்லி மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அப்போது குறுக்கிட்ட ஆசாத், இந்த விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கோ அல்லது சிபிஐ விசாரணைக்கோ எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்று பேசினார். இது பாஜக உறுப்பினர்களை நெளிய வைத்தது.
ஆனால் அருண் ஜெட்லி விவகாரத்தின் முக்கியமான பரிமாணம் மோடி அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் எவருமே அவரை ஆதரித்து இதுவரையில் பேசவில்லை என்பதுதான். சுஷ்மா ஸ்வராஜ் ஐந்து மாதங்களுக்கு முன்பு, லலித் மோடி விவகாரத்தில் மாட்டிக் கொண்டிருந்த போது அவரை ஆதரித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கும், ஜெட்லியும் பேசினார்கள். ஆனால் தற்போது ராஜ்நாத் சிங்கோ அல்லது சுஷ்மா வோ வெளிப்படையாக, ஆணித்தரமாக ஜெட்லியை ஆதரித்து எதுவும் பேசவில்லை. டிசம்பர் 22 ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அருண் ஜெட்லி, அத்வானி யைப் போன்றே அப்பழுக்கற்றவராக மீண்டு வருவார் என்று முதன்முறையாக தனது நிதியமைச்சரை ஆதரித்துப் பேசினார்.
இதுவும் எதிர்க்கட்சிகளால் எள்ளி நளையாடப் படுகிறது. ‘1995 ம் ஆண்டு ஜெயின் ஹவாலா ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்ட அத்வானி உடனே தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் வழக்கிலிருந்து விடுதலையான பிறகுதான் அவர் தேர்தலில் போட்டியிட்டார். அத்வானியை உதாரணமாக காட்டியிருப்பதன் மூலம் ஜெட்லியையையும் மோடி ராஜினாமா செய்ய சொல்லுகிறாரா?' என்று கேள்வி எழுப்புகின்றனர் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும்.
மற்றோர் சுவாரஸ்யமான விவகாரம், தொடர்ந்து ஜெட்லி க்கு எதிராக போராடி வரும் கீர்த்தி ஆசாத் மீது, இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரையிலும் பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான். இது பல சந்தேகங்களையும் எழுப்பிக் கொண்டிருக்கின்றது.
அருண் ஜெட்லி தான் மோடி அரசின் தூண் என்று சொன்னால் அது அட்சர சுத்தம் பிசகாத சரியான வார்த்தையாகவே இருக்கும். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயேயும் மோடி அரசின் மீதான எல்லா விதமான விமர்சனங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் ஜெட்லி கிட்டத்தட்ட பாஜக அரசின் கேடயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் மீது பெரியதோர் ஊழல் குற்றச் சாட்டு எழுந்து, அதனை விசாரிக்க டெல்லி அரசாங்கம் விசாரணை கமிஷனையே அமைத்திருக்கும் வேளையில் அவரை எந்தளவுக்கு அரணாக நின்று காக்க வேண்டுமோ அந்தளவுக்கு பாஜக வின் மூத்த அமைச்சர்கள் காக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஏற்கனவே ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா வுடன் ஜெட்லிக்கு ஏழாம் பொருத்தம். மோடி அரசு பதவியேற்ற போது, அதன் ஆரம்ப கட்டங்களில் ராஜ்நாத் சிங் கிற்கு எதிராக பல தகவல்களை மீடியாக்களில் கசியவிட்டது ஜெட்லிதான் என்ற கடுப்பு மத்திய உள்துறை அமைச்சருக்கு உண்டு. சுஷ்மா விவகாரம் வந்த போது அந்நிய செலாவணி மோசடிகளில் அவரை சிக்க வைக்க தனது கட்டுப்பாட்டின் கீழிருக்கும் அமலாக்கத் துறையை ஜெட்லி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று பரவலாகவே அரசியல் உயர் மட்டங்களில் பேசப் பட்டது.
அந்தப் பின்புலத்திலும், மோடியின் கடந்த கால அரசியல் பின்புலத்திலும் பார்த்தால் அருண் ஜெட்லி விவகாரத்தின் ஒரு புதிய பரிமாணம் புரியும். இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியில் கொண்டு வந்தது தானே என்றும், ஆனால் இதற்கான பெயரை ஆம் ஆத்மி கட்சி தட்டிக் கொண்டு போகப் பார்க்கிறதென்றும் கீரத்தி ஆசாத் குற்றஞ்சாட்டுகிறார். தன் மீதும் ஜெட்லி அவதூறு வழக்குப் போட வேண்டும் என்றும் ஆசாத் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் ஆசாத் மீது பாஜக தலைமை எந்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆசாத் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்போது கூட இந்த கால தாமதத்தை அக் கட்சி எப்படி நியாயப் படுத்தப் போகிறது என்பது விளங்காத புதிர்தான்.
பிஹார் தேர்தல் தோல்விக்குப் பிறகு அமீத் ஷா மற்றும் மோடியின் இரும்பு பிடியானது பாஜக வில் வேகமாகவே தளர்ந்து வருவதன் எதிரொலியாகவும்தான் அருண் ஜெட்லி விவகாரத்தில் அக்கட்சியின் செயற்பாடுகள் பார்க்கப் படுகின்றன.
இன்னொரு பக்கம் அளவுக்கு அதிகமான அரசியல் வல்லமையை ஜெட்லி பெற்றுக் கொண்டிருப்பதை கண்டிப்பாக தற்போதய பாஜக தலைமை விரும்பாது என்றும், அதன் தொடர்ச்சிதான் அவரது அரசியல் வலிமையை குறைக்கும் காரியமாக இந்த விவகாரம் பயன்படுத்தப் படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 19 மாதங்களில் மோடி ஆட்சி வந்த பிறகு மூன்று பேரை மட்டும் டெல்லி ஊடகங்கள் சீண்டுவதில்லை. இந்த மூவரும் டெல்லியின் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு புனித பசுக்கள். ஆனால் தற்போது அதில் ஒரு புனித பசு வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஊடக வெளிச்சத்தில் நிற்கும் என்று தெரியவில்லை. ஆனால் மோடி அரசு வந்த பிறகு முதன் முறையாக, அந்த அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் வறு பட்டுக் கொண்டிருக்கிறார். அதனை விட முக்கியம், பாஜக வின் உள்ளே நிலவும் அதிகார போட்டியை இந்த விவகாரம் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றது. ஜெட்லியை அமீத்ஷாவும் மோடியுமே ஓரங்கட்டப் பார்க்கிறார்களா என்பது இன்னும் சில தினங்களில் அம்பலமாகிவிடும்!












Click it and Unblock the Notifications