முட்டும் காங்! மோதும் பாஜக! வடகிழக்கு யாருக்கு? கருத்து கணிப்பு பலிக்குமா? இன்று வாக்கு எண்ணிக்கை
வடகிழக்கு மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியுள்ளன
அகர்தலா: திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலையடுத்து இன்று வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜகவுக்கு இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாநிலத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 2018ம் ஆண்டு பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் வீழ்த்தியது.
இது அக்கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து இந்த தேர்தலிலும் பாஜக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என்று கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். இம்முறை பாஜகை வீழ்த்த சிபிஎம்+காங்கிரஸ் கூட்டணி களமிறங்கியுள்ளது.

திரிபுரா
சிபிஎம் 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன் 55 தொகுதிகளிலும், மாநில கட்சியான திப்ரா மோத்தா 47 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மாநிலத்தில் மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். தேர்தலின் போது மொத்தம் 85.25 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல நாகாலாந்தை பொறுத்த அளவில், மொத்தமுள்ள 60 தொகுதியில் அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார் எனவே அந்த தொகுதி தவிர மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த 27ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

மேகாலயா
மாநில கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதனையடுத்து இந்த கூட்டணி 37-48 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. மேகாலயா மாநிலத்தை பொறுத்த அளவில் கடந்த முறை தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் இம்முறை கூட்டணியை விட்டு வெளியே வந்து தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கிறது. காங்கிரசும் தனித்து அனைத்து தொகுதிகளிலும் களம் இறங்கியுள்ளது.

மாநில கட்சி
தேசிய மக்கள் கட்சி 57 தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 58 தொகுதியிலும் போட்டியிட்டுள்ளது. இம்மாநிலத்திற்கு கடந்த 27ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுமார் 21.6 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். மொத்தம் 85.25 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இம்மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி 18-24 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்றும், காங்கிரஸ் 6-12 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனவும், பாஜக 4-8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தல்
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 9 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மீதம் உள்ள 6 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளையும், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையும் பாதிக்கும் என்பதால் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தியுள்ளன. எப்படி இருப்பினும் இம்மூன்று மாநிலங்களில் 2 மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications