5 விநாடிகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட 'ககன்யான்' சோதனை திட்டம்! என்ன நடந்தது? இஸ்ரோ தலைவர் விளக்கம்
ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் கனவு மிஷனான ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை இன்று நடைபெற இருந்த நிலையில், தற்போது இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த கனவை சாத்தியப்படுத்த தயாரிக்கப்பட்டதுதான் ககன்யான் திட்டம். எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கு என தனியான விண்வெளி மையத்தை உருவாக்க இருக்கிறார்கள். விண்வெளி துறையை பொறுத்த அளவில் ரஷ்யா, இந்தியாவுக்கு நெருங்கிய நண்பன் என்பதால் இந்த விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்களை தங்க வைக்க நம்மால் கோர முடியும். ஆனால் அதற்கு நமக்கு முதலில் சில அனுபவங்கள் தேவைப்படுகிறது.

அதில் ஒன்றுதான் சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன். இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியில் பறந்தார். அவரை பறக்க வைத்தது சோவியத் ரஷ்யா. எனவே இந்தியா இந்த முறை எந்த நாடுகளின் உதவியுமின்றி தங்களது வீரர்களை விண்ணில் பறக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது. இதற்காக போடப்பட்ட ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக இந்த திட்டத்தின் முதல்கட்ட சோதனை இன்று நடைபெறுகிறது.
அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ராக்கெட்டிலிருந்து மனிதர்கள் இருக்கும் கலனை பூமியில் பத்திரமாக தரையிறங்க வைக்கும் மிஷன் இன்று பரிசோதனை செய்து பார்க்கிறது இஸ்ரோ. இதற்காக இஸ்ரோ தனியாக ஒரு ராக்கெட்டை வடிவமைத்திருக்கிறது. இந்த ராக்கெட்டின் உச்சியில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் மாதிரி கலன் (Crew Module) இருக்கும். இந்த கலனை ஏந்திக்கொண்டு ராக்கெட் 17 கி.மீ உயரத்திற்கு ஒலியை விட 1.5 மடங்கு வேகத்தில் பறக்கும். அங்கிருந்து மாதிரி கலன் மட்டும் தனியாக பிரிந்து வங்கக்கடலை நோக்கி வரும். கடலுக்கும் கலனுக்கும் சுமார் 2 கி.மீ தொலைவு இருக்கும் போது கலனில் உள்ள பாராசூட் விரிந்து கலனின் வேகத்தை குறைக்கும்.
இவ்வாறு வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் பாதுகாப்பாக இந்த கலன் தரையிறங்கும். அங்கு கடற்படையினர் இந்த கலனை மீட்டு கரைக்கு கொண்டு வருவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனையாகும். இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆனால் சாதகமான வானிலை இல்லாததால் 8 மணிக்கு ஏவப்பட வேண்டிய ராக்கெட் 8.30க்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஏவப்படாமல், 8.45லிருந்து 9 மணிக்குள் ஏவப்படும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் கடைசி 5 விநாடிகளில் ராக்கெட் ஏவுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத், வானிலை காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார். ராக்கெட், அதில் உள்ள கலன் என அனைத்தும் சரியாக இருப்பதாக கூறிய அவர் இதில் வேறேதும் பிரச்னை இருக்கிறதா? என்று ஆராய்ந்து பின்னர் ஏவப்படும் என விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications