910 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஒமர் அப்துல்லா! மற்றொரு தொகுதியில் 4,783 வாக்குகளில் தோல்வி!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் முதல்வர் ஒமர் அப்துல்லா சோனவர் தொகுதியில் 4, 783 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். பீர்வா தொகுதியில் 910 வாக்குகள் வித்தியாசத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெற்றி பெற்றுள்ளார் ஒமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 87 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சோனாவர், பீர்வா ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் ஒமர் அப்துல்லா போட்டியிட்டார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சோனவர் தொகுதியில் ஒமர் அப்துல்லா பின் தங்கியே இருந்தார். கடைசியாக பி.டி.பி. கட்சியின் வேட்பாளர் அஷரப்பிடம் 4,783 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் ஒமர் அப்துல்லா.

இத்தொகுதியில் அஷ்ரப் (பி.டி.பி) 14,283 வாக்குகளையும் ஒமர் அப்துல்லா - 9,500 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
மற்றொரு தொகுதியான பீர்வாவிலும் ஒமர் அப்துல்லாவின் நிலை பரிதாபமாக இருந்தது. ஒருகட்டத்தில் தோல்வியைத் தழுவும் அளவுக்கு அவர் பின் தங்கியும் போனார்,
ஒருவழியாக 910 வாக்குகள் வித்தியாசத்தில் ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
பீர்வா தொகுதியில் ஒமர் அப்துல்லா பெற்ற வாக்குகள்: 23, 717
ஒமரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நஸிர் அகமது கான் பெற்ற வாக்குகள்: 22.807
துணை முதல்வர் தோல்வி
இதேபோல் அம்மாநில துணை முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரசந்த்தும் 14,790 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். சாம்ப் தொகுதியில் போட்டியிட்ட தாராசந்த் 21,243 வாக்குகள் பெற்றார். அத்தொகுதியில் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் கிருஷ்ணன் லால் 36,033 வாக்குகள் பெற்றார்.
பிரிவினைவாத தலைவர் சஜ்ஜன் லோன் வெற்றி
மேலும் ஹண்ட்வாரா தொகுதியில் போட்டியிட்ட மக்கள் மாநாட்டு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பிரிவினைவாத தலைவருமான சஜத் லோன் 5, 423 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சஜத் லோன் பெற்ற வாக்குகள்: 29, 355
தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சவுத்ரி முகமது ரம்ஜான் பெற்ற வாக்குகள்: 23, 932












Click it and Unblock the Notifications