காஷ்மீர் கார்கில் மலை கவுன்சில் தேர்தல்: பாஜகவுக்கு எதிராக கைகோர்த்த காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் கார்கில் மலை கவுன்சில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் ஆகிறது.

இதற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தற்போது விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில், இன்று அம்மாநிலத்தின் லடாக்கில் கார்கில் மலை கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது. இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை அந்தந்த மாநிலங்களுக்குள் சுயாட்சி வழங்கப்பட்ட தன்னாட்சி நிர்வாகப் பிரிவுகளை உருவாக்க அனுமதித்துள்ளது. அதன்படி லடாக், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் சில மாவட்டங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
லடாக்கில் கார்கில் மற்றும் லே மாவட்டத்திற்கு இந்த அதிகாரம் இருக்கிறது. தன்னாட்சி மலையக கவுன்சில்கள் கிராம பஞ்சாயத்துகளுடன் இணைந்து பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், கல்வி, நில பயன்பாடு, வரி விதிப்பு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றில் முடிவுகளை எடுக்கிறது. கார்கில் மாவட்டத்தை பொறுத்த அளவில் தற்போதுள்ள கவுன்சிலின் பதவிக்காலம் இந்த மாதம் 1ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. முன்னதாக தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பெரோஸ் அகமது கான் இந்த கவுன்சிலுக்கு தலைவராக இருந்தார்.
தற்போது பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், இன்று மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 95,388 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதேபோல மொத்தம் 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இந்த தேர்தலை பொறுத்த அளவில் பாஜக பலமாக இருக்கும் பகுதியில் மட்டும் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரஸும் கூட்டணியில் இருக்கின்றன. தேசிய மாநாட்டு கட்சி 17 பேரையும், காங்கிரஸ் 22 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. பாஜக 17 வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 4 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.
தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் பதட்டமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications