அக்கவுண்ட் திறந்த ஆம்ஆத்மி.. காஷ்மீரில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி கெஜ்ரிவாலின் சிஷ்யன் அசத்தல் வெற்றி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஆம்ஆத்மி அக்கவுண்ட்டை திறந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் சிஷ்யன் மேக்ராஜ் மாலிக் தோதா தொகுதியின் ஆம்ஆத்மி வேட்பாளராக போட்டியிட்டு பாஜக வேட்பாளர் கஜய் சிங் ராணாவை வீழ்த்தி வாகை சூடியுள்ளார். இதன்மூலம் ஆம்ஆத்மி 5வது மாநிலத்துக்குள் நுழைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 48 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் 90 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 29 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 4 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மற்றவர்கள் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
இந்த தேர்தலில் ஒரு இடத்தில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. தோதா தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளராக மேக்ராஜ் மாலிக் போட்டியிட்டார். ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தீவிர ஆதரவாளரான மேக்ராஜ் மாலிக் தோதா தொகுதியில் மொத்தம் 23,228 ஓட்டுகள் பெற்றார்.
இந்த தொகுதியில் மேக்ராஜ் மாலிக்கை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வட்பாளர் கஜய் சிங் ரானா மொத்தம் 18,690 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் ஆம்ஆத்மி வேட்பாளர் மேக்ராஜ் மாலிக் 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் கஜய் சிங் ரானாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் கலித் நஜிப் 13,334 ஓட்டுகளுடன் 3ம் இடம் பிடித்தார்.
இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆம்ஆத்மி கட்சி 5வது மாநிலத்துக்குள் நுழைந்துள்ளது. ஆம்ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ளது. அதேபோல் கோவா, குஜராத்தில் எம்எல்ஏக்கள் உள்ளன. அந்த வரிசையில் 5வதாக தற்போது ஜம்மு காஷ்மீரிலும் ஆம்ஆத்மி கட்சிக்கு எம்எல்ஏ கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வென்ற மேக்ராஜ் மாலிக்கிற்கு ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தோதா தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளர் மேக்ராஜ் மாலிக் பாஜக வேட்பாளரை வீழ்த்தி அசத்தலான வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள். நீங்கள் இந்த தேர்தலில் நீங்கள் கடினமாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளீர்கள். 5வது மாநிலத்துக்குள் கட்சி நுழைந்திருக்கும் நிலையில் ஆம்ஆத்மியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications