ஜம்மு காஷ்மீர்: 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு- களத்தில் 239 வேட்பாளர்கள்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நேற்று கடைசி நாள். 27 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா) போட்டியிடும் கந்தெர்பால் தொகுதியில் அதிகபட்சமாக 15 பேரும் புட்ஹால் தொகுதியில் குறைந்தபட்சமாக 4 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. 90 சட்டசபை தொகுதிகளில் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18-ந் தேதியும் 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25-ந் தேதியும் 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ந் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 பேர் களம் காண்கின்றனர். 2-வது கட்ட தேர்தலுக்கு 266 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நேற்று கடைசி நாள். மொத்தம் 27 பேர் நேற்று வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனையடுத்து 2-வது கட்ட தேர்தல் களத்தில் மொத்தம் 219 பேர் போட்டியிடுகின்றனர். பட்காம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 பேரும் ஶ்ரீநகர் மாவட்டத்தில் 6 பேரும் ரஜோரியில் 5, பூஞ்ச் மாவட்டத்தில் 5 பேரும் ரேசி மாவட்டத்தில் 2 பேரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். கந்தெர்பால் மாவட்டத்தில் யாரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவில்லை.
2-வது கட்ட தேர்தல் களத்தில் ஶ்ரீநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 93 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 46, ரஜோரியில் 34, பூஞ்ச் மாவட்டத்தில் 25, கந்தெர்பால் மாவட்டத்தில் 21, ரேசி மாவட்டத்தில் 20 பேர் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா போட்டியிடும் கந்தெர்பால் தொகுதியில் அதிகபட்சமாக 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிகக் குறைந்தபட்சமாக புட்ஹால் தொகுதியில் 4 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
2-வது கட்ட தேர்தல் களத்தில் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா, சிறையில் இருக்கும் பிரிவினைவாத இயக்கத் தலைவர் சர்ஜன் அகமது வாகே என்ற பர்காதி ஆகியோர் விஐபி வேட்பாளர்களாவர்.












Click it and Unblock the Notifications