கார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டதை போன்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் முயற்சி இந்த முறை முறியடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வெடிகுண்டுகளுடன் ஏற்றிவரப்பட்ட கார் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, வெடிக்க வைக்கச் செய்யப்பட்டது.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் நாசகாரச் செயலை அவ்வளவு எளிதாக இந்தியர்கள் மறந்துவிட முடியாது.

புல்வாமா தாக்குதல்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பஸ் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை கொண்டு மோதச் செய்து தீவிரவாத தாக்குதலை அரங்கேற்றினர் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர். இந்த மோசமான தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாது, உலகையே உலுக்கியது.

சீறிப் பாய்ந்த போர் விமானங்கள்
இதன் பிறகு, ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் முகாம் மீது, இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போர் விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து சண்டைக்கு தயாராகின.

உளவுத்துறை
இத்தனை பரபரப்புகளுக்கு ஆரம்பப்பள்ளி புல்வாமா தாக்குதல்தான். இந்தநிலையில் அதே பாணியிலான மற்றொரு தாக்குதலை அங்கு நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த தகவல் உளவுத்துறை மூலமாக, பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு சான்ட்ரோ கார் ஒன்றை வாகனத் தணிக்கைகாக பாதுகாப்பு படையினர் நிறுத்தினார். ஆனால் தடைகளை தாண்டி கொண்டு அந்த கார் சீறிப் பாய்ந்தது.

மர்ம கார்
இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர், காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருவதைப் பார்த்ததும் காரிலிருந்து குதித்து அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அந்த காரை அதிகாரிகள் பரிசோதனை செய்து பார்த்தபோது காரின் பின்பக்கத்தில் ஐஇடி வகை வெடிகுண்டுகள் நிரம்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துவர வைக்கப்பட்டனர்.
|
வெடித்த கார்
அந்த பகுதியில் உள்ள மக்கள், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். குண்டுகள் நிரம்பிய கார் சுற்றிலும் மரம் நிரம்பிய பகுதியில் வைத்து வெடிக்கச் செய்யப்பட்டது. அந்த காட்சி, ட்ரோன் கேமரா மூலமாக வீடியோவாக படம் எடுக்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் உரிய நடவடிக்கையால் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலில் இருந்து நாடு தப்பியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட முயற்சி செய்தது எந்த தீவிரவாத அமைப்பு? அவர்களுக்கு யார் யார் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது பற்றிய விசாரணை துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications