ஜெ.விடுதலைக்கு எதிரான கர்நாடகா அப்பீல் மனு மீது இன்று விசாரணை - நீதிபதி அகர்வால் அதிரடி மாற்றம்!!
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கில் விசாரணை நீதிபதி ஆர்.கே. அகர்வாலுக்கு பதிலாக நீதிபதி அமித்வா ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1991-96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 65 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையை கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல் விதித்து தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியே 1 லட்சமும் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு தலா ரூ.10 கோடியே 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி வருமானத்திற்கான ஆதாரங்களை ஆய்வு செய்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

மேல்முறையீடு வழக்கு
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் முன்னிலையில் கடந்த அக்டோபர் 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பு பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

பதில்மனு தாக்கல்
அப்போது தங்களுக்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பும், வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கர்நாடக அரசு தரப்புக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை நவம்பர் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்பின் ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.

ஜனவரி 8 ஒத்திவைப்பு
இதேபோல் ஜெயலலிதா விடுதலையை ரத்து செய்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் கடந்த 18ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ''இந்த வழக்கு தொடர் பாக கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப் பிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

இறுதிவாத தொகுப்பு தாக்கல்
வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பினரும் இறுதிவாதம் தொடர்பான தொகுப்பை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என தெரிவித்து, வழக்கை ஜனவரி 8ம் தேதி ஒத்திவைத்தனர். இதையடுத்து கர்நாடக அரசு, திமுக தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பு சார்பில் இறுதிவாத தொகுப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி அகர்வால் மாற்றம்
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கில் விசாரணை நீதிபதி அகர்வாலுக்கு பதிலாக நீதிபதி அமித்வா ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று விசாரணை தொடக்கம்
கர்நாடகா அப்பீல் மனுவை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச் இன்று விசாரிக்கும். உச்சநீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணை நடத்துவது குறித்து நாளை முடிவெடுக்கப்படும்












Click it and Unblock the Notifications