முதல்வர் மஞ்சிக்கு ஆதரவான 7 அமைச்சர்களையும் கட்சியை விட்டு நீக்கியது ஐ. ஜனதாதளம்
பாட்னா: பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 7 அமைச்சர்களையும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட்டு நீக்கியுள்ளது.
சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை மஞ்சி நிரூபிக்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை ஐக்கிய ஜனதாதளம் தலைமை எடுத்துள்ளது. முன்னதாக இந்த 7 பேரையும் கட்சியை விட்டு ராஜினாமா செய்யுமாறும், அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறும் கட்சித் தலைவர் சரத் யாதவ் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். இதையடுத்து அனைவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளார் சரத் யாதவ்.

தற்போது மஞ்சி அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே பாக்கி உள்ளார். அவர் கட்சி சாராதவர், சுயேச்சை எம்.எல்.ஏ ஆவார். மஞ்சி அமைச்சரவையிலிருந்து 20 பேர் ராஜினாமா செய்து விட்டனர். 2 பேரை அவர் நீக்கியிருந்தார். 7 பேர் மட்டுமே மஞ்சிக்கு ஆதரவாக நீடித்து வந்தனர்.
இந்த நீக்கத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த 7 பேரும் கலந்து கொள்ள தடை இல்லை. இருப்பினும் இவர்களில் நான்கு பேர் மேலவை உறுப்பினர்கள் என்பதால் இவர்களால் சட்டசபையில் வாக்களிக்க முடியாது.
பிப்ரவரி 20ம் தேதி மஞ்சி தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓட்டெடுப்பின்போது பாஜக எப்படி செயல்படும் என்பது குறித்து அக்கட்சி இதுவரை விளக்கவில்லை. ஆனால் நேரடித் தலையீட்டை பாஜக தவிர்ப்பது நல்லது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications