ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ஜேடியூ, ஏஜேஎஸ்யூவுடன் பாஜக கூட்டணி- ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்( ஜேடியூ) மற்றும் ஏஜேஎஸ்யூ ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக அம்மாநில தேர்தல் இணை பொறுப்பாளரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் உருவான போது பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜேடியூ கடந்த சில தேர்தல்களில் காணாமல் போன நிலையில் மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. அதற்கு முன்னதாகவே நவம்பர் மாதம் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுடன் ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலும் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் களப் பணியில் இறங்கிவிட்டன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. மீண்டும் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதில் இரு கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதே நேரத்தில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதில் பாஜக தீவிரம் காட்டுகிறது. பாஜகவுடன் ஜேடியூ, ஏஜேஎஸ்யூ ஆகியவையும் கை கோர்க்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலம் உருவான போது ஜேடியூவுக்கும் செல்வாக்கு இருந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையிலும் கூட ஜேடியூ இடம் பெற்றிருந்தது. ஆனால் கடந்த சில தேர்தல்களில் ஜேடியூ இருந்த இடம் தெரியாமல்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவிடம் இருந்து 12 தொகுதிகளை ஜேடியூ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ராஞ்சியில் ஜார்க்கண்ட் மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரான ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக, ஜேடியூ, ஏஜேஎஸ்யூ இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளன. எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையும் முடிவடையும் நிலையில் உள்ளது. இது தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் அக்டோபர் 2-ந் தேதி வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications