
15 வயது இஸ்லாமிய சிறுமிக்கு திருமணம்.. "சட்டப்பூர்வமானதுதான்".. ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 15 வயது இஸ்லாமிய சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் சட்டப்பூர்வமானதுதான் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடு முழுவதும் குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அரசு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், 15 வயது சிறுமி ஒருவருக்கு நடைபெற்ற திருமணத்தை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின் பெயரில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் போக்சோ சட்டங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல என கேரள உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் திருமணத்தை அனுமதித்திருக்கிறது.
காலாவதியான ஆன்லைன் ரம்மி தடை மசோதா..ஆளுநர் ஆர்என் ரவியை நாளை சந்திக்கும் சட்ட அமைச்சர் ரகுபதி! ஏன்?

வழக்கு
ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில் தனது மகளை காணவில்லையென்றும், கடத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி சஞ்சய் குமார் திவேதி விசாரித்தார். இதில் மகள் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "இஸ்லாம் திருமண சட்டத்தின்படி 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே எனது மனுதாரர் தானாக விரும்பி திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்கு அவருக்கு முழு அதிகாரமும் உரிமையும் உண்டும். இதனை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூட தடுக்க முடியாது" என வாதாடினார்.

திருமணம்
மேலும், "பெண்ணின் தந்தை தவறான நோக்கத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். எனவே இந்த புகாரின் அடிப்படையில் எனது மனுதாரர் மீது IPC பிரிவு 366A மற்றும் 120B ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் சிறுமியின் தந்தை தரப்பில், "அல்லாவின் அருளால் எனது மகளுக்கு நல்ல பொருத்தம் கிடைத்திருக்கிறது. இதை விட நல்ல பொருத்தம் அது. எனவே எனது மகளை என்னிடம் திருப்பி அனுப்புங்கள். சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுங்கள்" என்று கோரினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இறுதியாக இந்த திருமணம் சட்டப்படி செல்லும் என்று கூறினார்.

முஸ்லீம் தனிச் சட்டம்
இதற்கு மேற்கோளாக 'சர் டின்ஷா பர்துன்ஜி முல்லா எழுதிய முகமதிய சட்டத்தின் கோட்பாடுகள்' எனும் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த 195வது பிரிவையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதாவது, 195வது பிரிவு என்ன சொல்கிறது எனில், "இஸ்லாம் மதத்தை சேர்ந்த பருவமடைந்த எவரானாலும் திருமண பந்தத்தில் நுழையலாம். பருவமடையாத அல்லது மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் வழிகாட்டுதல்படி திருமணம் செய்யலாம். பருவமடைந்த இஸ்லாமியரின் திருமணம் அவரின் அனுமதியின்றி நடத்தப்பட்டால் அது செல்லாது. பருவமடைதலுக்கு 15 வயது என்பது சான்று" என சொல்லியிருக்கிறது.

போக்சோ
இதனை குறிப்பிட்ட நீதிபதி, "சிறுமிக்கு 15 வயது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மணமகனுக்கு 24 வயது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ள கோட்பாடுகளால் நடைபெற்றிருக்கிறது. ஆகவே மணமகன் மீது பதியப்பட்டுள்ள IPC பிரிவு 366A மற்றும் 120B வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிடுகிறேன்" என்று தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த 21ம் தேதி இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், "குழந்தை திருமணம் சமூகத்தின் சாபக்கேடு. திருமணம் என்கிற போர்வையில் குழந்தைகளுடன் உடல் உறவு கொள்வதை போக்சோ சட்டம் தடுக்கிறது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.