பழங்குடியின இளைஞரின் தலையை வெட்டி.. அதனுடன் செல்ஃபி எடுத்த கொடூரர்கள்.. ஜார்க்கண்டில் பயங்கரம்
ராஞ்சி: பழங்குடி இளைஞரின் தலையை வெட்டி கொலை செய்ததுடன் மட்டுமல்லாமல் அந்த தலையை எடுத்து கொலையாளிகள் தனித்தனியாக செல்ஃபி எடுத்த பயங்கர சம்பவம் ஜார்க்கண்டில் அரங்கேறியுள்ளது.
நிலத்தகராறு காரணமாக அந்த பழங்குடி இளைஞரை அவர்கள் வெட்டி கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிருகமாகும் மனிதன்..
சமீபகாலமாக மனிதர்களால் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன. காதலியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய காதலன், கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்து உடல் பாகங்களை அப்புறப்படுத்திய மனைவி என அன்றாடம் வரும் செய்திகளை பார்க்கும் போது நம் ஈரக்குலையே நடுங்கி விடுகின்றன. இந்த சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளாக, மற்றொரு பயங்கர சம்பவம் ஜார்க்கண்டில் நடந்துள்ளது.

நிலத்தகராறால் எழுந்த பகை
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள முர்கு பகுதியைச் சேர்ந்தவர் கானு முண்டா (24). பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரான இவருக்கு அந்தப் பகுதியில் 1 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இதனிடையே, அதே ஊரைச் சேர்ந்த சாகர் (25) என்பவர், கானு முண்டாவின் நிலத்தை அபகரிக்க கடந்த 3 ஆண்டுகளாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கானு முண்டா அவர்களின் முயற்சிகளை சட்டரீதியாக முறியடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாகர், ஆள் வைத்து அடிப்பது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். ஆனால், எதற்கும் கானு முண்டா அடிபணியவில்லை.

தலையை வெட்டி..
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது நிலத்தை காவல் காப்பதற்காக அங்கு கானு முண்டா சென்று தனியே படுத்திருக்கிறார். இதை அறிந்த சாகர் மற்றும் அவரது கூட்டாளிகள், அங்கு கும்பலாக சென்று கானு முண்டாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த அவர்கள், தலையை 15 கி.மீ.க்கு அப்பால் வீசிச்சென்றனர். அடுத்த நாள் காலையில், கானு முண்டா கொலை செய்யப்பட்டிருப்பதை கண்ட அவரது உறவினர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர்.

வெட்டிய தலையுடன் செல்ஃபி..
இதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார், கானு முண்டாவின் உடலையும், தலையையும் கைப்பற்றினர். பின்னர் நடத்திய விசாரணையில், நிலத்தகராறு காரணமாக சாகர் மற்றும் அவரது கூட்டாளிகளே இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜார்க்கண்டில் இருந்து பீகாருக்கு தப்பியோட முயன்ற சாகர், அவரது மனைவி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் செல்போன்களை சோதனை செய்த போது, கானு முண்டாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரது தலையுடன் அவர்கள் தனித்தனியாக சிரித்தபடி செல்ஃபி எடுத்ததும் தெரியவந்தது. குற்றவாளிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications