சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உச்சநீதிமன்ற நீதிபதி நாகப்பன் திடீர் விலகல்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகப்பன் தானாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 1996-1997ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சசிகலா, அதிமுக முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரன், பாஸ்கரன், ஜெ.ஜெ. டிவி ஆகியோர் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கப் பிரிவு 6 வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை, சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகள் ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாடுகளில் நவீனக் கருவிகள் வாங்கியது, வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்தது, வெளிநாட்டு நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனை செய்தது ஆகியவை தொடர்பானவை ஆகும்.
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த 6 வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, சசிகலா, தினகரன் தரப்பினர் அண்மையில் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி தட்சிணாமூர்த்தி விசாரித்தார்.
இதில் சசிகலா சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் பணப் பரிவர்த்தனை செய்த வழக்கில் போதிய முகாந்திரம் இல்லாததால், சசிகலாவை விடுவிப்பதாக அவர் உத்தரவிட்டார்.
பின்னர், டி.டி.வி. தினகரன் மீது தொடரப்பட்ட, அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் பண பரிவர்த்தனை செய்த வழக்கு, அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தது, வெளிநாட்டுகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்த வழக்கு ஆகியவற்றில் இருந்து விடுவிக்கக் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தட்சிணாமூர்த்தி விசாரித்தார்.
இந்த இரு வழக்குகளிலும் போதிய முகாந்திரம் இல்லாததால் தினகரனை விடுவிப்பதாக அவர் உத்தரவிட்டார். இதன் மூலம் தினகரன் மீது அமலாக்கப் பிரிவு பதிவு செய்த இரு வழக்குகளும் முடிவுக்கு வந்தன. சசிகலா மீது தொடரப்பட்ட ஒரு வழக்கும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளில் இருந்து சசிகலா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி நாகப்பன் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தானாக இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி நாகப்பன் தெரிவித்தார். தான் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
நீதிபதி நாகப்பன் தமிழகத்திலுள்ள கரூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் பானுமதி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications