'கர்மயோகி'... 'முன்னுதாரண புருஷர்' அப்துல் கலாம்.. டெல்லியில் பா.ஜ.க. புகழஞ்சலி
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 'கர்ம யோகி' .. முன்னுதாரண புருஷராக திகழ்ந்தவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேகாலயாவில் மாரடைப்பால் அப்துல்கலாம் நேற்று இரவு காலமானார். அவரது உடல் இன்று பகல் டெல்லிக்குக் கொண்டுவரப்படுகிறது. அப்துல் கலாம் மறைவால் நாடு பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

அப்துல்கலாம் மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலாமுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.
இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, நாட்டின் தொலைநோக்கு சிந்தனையாளரை தேசம் இழந்துவிட்டது.. ஒரு கர்ம யோகியாக வாழ்ந்தவர் அப்துல் கலாம்..
இந்த தேசத்தின் முன்னுதாரண புருஷராக திகழ்ந்தவர்.. இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் மிக முக்கிய பங்கு வகித்தவர் அப்துல் கலாம் என்றார்.
அதேபோல், தம் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டவர்.. வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொடுத்தவரும் அப்துல் கலாம்.. அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்றார்.
முன்னதாக இக்கூட்டத்தில் கலாம் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications
