தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்கு வந்து பார் என்று போனில் மிரட்டல்.. கன்னட அமைப்பின் தலைவர் புகார்
பெங்களூரு: தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்குள் வந்து பார் என்று கூறி தொலைபேசியி்ல் ஒருவர் தன்னை தமிழில் திட்டியதாக கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே என்ற கன்னட அமைப்பின் தலைவர் பெங்களூரு போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்து வரும் பெங்களூர் போலீஸார் தொலைபேசி அழைப்பு திருச்சியிலிருந்து வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகாரைக் கூறியவர் பெயர் நீலேஷ் கெளடா. இவர் கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே என்ற அமைப்பின் தலைவர் ஆவார். பெங்களூரில் தமிழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகளில் இதுவும் ஒன்று. பெங்களூரு நகரில் கடந்த 12ம் தேதி நடந்த மிகப் பெரிய கலவரத்தின்போது நீலேஷ் கெளடாவுக்கு ஒரு போன் வந்ததாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் எனது ஆதரவாளர்களும் போராட்டத்தை நடத்தி விட்டு ஆர்வி சாலையில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்தோம். அப்போது எனக்கு போன் வந்தது. 85267 என்ற எண்ணில் தொடங்கிய அந்த அழைப்பில் பேசிய நபர் என்னுடன் தமிழில் பேசினார். காவிரிப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்துவதை விடுமாறு கூறினார். தான் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறினார்.
அவர் என்னுடன் 6 நிமிடம் பேசினார். எனக்குத் தமிழ் தெரியாது. கன்னடம் அல்லது இந்தியில் பேசுமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் விடாமல் தமிழிலேயே அசிங்கமாக பேசினார். இடை இடையே ஆங்கிலத்திலும் பேசினார். போராட்டத்தை நிறுத்துமாறு அவர் கூறினார். நான் முடியாது என்றேன். அதற்கு அவர் தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்குள் வந்து பார் என்றால். அத்திபலே வரையாவது வந்து பார் என்றார். வட அமெரிக்காவிலிருந்து தான் பேசுவதாகவும் அவர் கூறினார் என்று கூறியுள்ளார் நீலேஷ் கெளடா.
பெங்களூரு போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்பு திருச்சியிலிருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர் யார் என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை. வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீஸார் பெங்களூர் நகர பாதுகாப்புப் பணிகளில் மும்முரமாக இருப்பதால் இதுகுறித்து விசாரணை அளவில் மட்டுமே உள்ளதாம்.
சம்பந்தப்பட்ட நபர் பேசிய வார்த்தைகள் சர்ச்சைக்குரியவைதான், தூண்டும் வகையில் பேசியதும் உண்மைதான் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட திருச்சி நபர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பெங்களூருவில் இருந்து வந்து திருச்சியில் உள்ளவரைக் கைது செய்து கூட்டிச் சென்றால் தேவையில்லாத பல பிரச்சினைகள் உருவாகும் என்பதால் இதுகுறித்து காவல்துறையினர் யோசித்தே நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நபர் மீது ஐபிசி 507வது பிரிவின் கீழ் பெங்களூர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications