6 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் தர முடியும்.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா புதிய மனு #cauvery
டெல்லி: 6 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் தர முடியும் என்ற நிலையில் உள்ளோம். அதுவும் கூட தற்போது விநாடிக்கு 10,000 கன அடி நீர் மட்டுமே திறக்கக் கூடிய நிலையில் உள்ளோம் என்று கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இந்தக் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கர்நாடக மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் சில அமைப்புகள் தொடர் போராட்டங்களில் குதித்துள்ளன. உச்சகட்டமாக அனைவரையும் பீதிக்குள்ளாக்கும் வகையில் ஒரு பந்த்தையும் நடத்தி முடித்தனர். தமிழர்கள், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீதான தாக்குதலுக்கும் குறைவில்லை.
இந்த நிலையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவைக் குறைக்கக் கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விநாடிக்கு 10,000 ஆக குறைக்க உத்தரவிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் 6 நாட்களுக்காவது தண்ணீர் திறக்க முடியும்.
கர்நாடகத்தில் மிகவும் மோசமான நிலை உள்ளது. போதிய தண்ணீர் இல்லாததாலும், விவசாயிகள் போராட்டம் காரணமாகவும் தினசரி ரூ. 500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே செப்டம்பர் 5ம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கர்நாடகத்தில் காவிரி பாசனப் பகுதியில் உள்ள விவசாயப் பணிகளுக்கு 40 டிஎம்சி தண்ணீர் தேவை. ஆனால் தற்போது நான்கு முக்கிய அணைகளிலும் மொத்தமே 39 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் நேற்று கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வழங்கியுள்ளார். இன்று இந்த வழக்குப் பதிவாகிறது. விசாரணை எப்போது என்பது பின்னர் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications
