'கம்பளா' தடையை நீக்க கர்நாடக அமைச்சரவை முடிவு
பெங்களூர்: கம்பளா போட்டிக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்ய கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான சட்டமுன்வடிவை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் பல லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்காக போர்க்குரல் எழுப்பினர். மாணவர்கள் நடத்திய இந்த எழுச்சி போராட்டம் உலகம் முழுவதும் பரவியது. உலகத் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக பல்வேறு நாடுகளில் போராட்டம் நடத்தினர்.

வரலாறு காணாத சரித்திர புரட்சியின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் முதலில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழக சட்டசபையில் நிரந்தர சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் எதிரொலி தமிழகத்தோடு மட்டும் நின்றுவிடாமல் கர்நாடக மாநிலத்தையும் அதிரவைத்துள்ளது.
ஏனேனில், கர்நாடக மாநிலத்தில் கம்பளா எனும் எருதுவிடுதல் நிகழ்ச்சிக்கும் தடை வாங்கியுள்ளது பீட்டா அமைப்பு. இத்தடையால் கடந்த 2 ஆண்டுகளாக எருதுவிடுதல் நிகழ்ச்சி நடைபெறவில்லை. தற்போது இந்த தடையை நீக்க வேண்டும் எனவும், கம்பளா போட்டிக்கு அனுமதி வழங்க மாநில அரசு அவசரம் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கம்பளா போட்டிக்கு சட்டம் இயற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் அவசர சட்டம் கொண்டு வர முடியாது. அதற்கு பதிலாக கம்பளா போட்டிக்கு அனுமதி வழங்க திருத்தப்பட்ட சட்டமசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொண்டதைப் போல கம்பளா தடையை நீக்கவும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
