காஷ்மீர் தாக்குதல்: பாதுகாப்பு நிலவரம்- நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்- ராகுல் காந்தி பங்கேற்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். மேலும் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது.
பஹல்காம் படுகொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளது. இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் சட்டவிரோதமாக தொடர்ந்து தங்கி இருந்தால் ரூ.3 லட்சம் அபராதமும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீர் திறப்பை ஏற்கனவே மத்திய அரசு நிறுத்திவிட்டது. பாகிஸ்தானுடன் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வீடுகள், காஷ்மீரில் வெடிவைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது.
பஹல்காம் படுகொலைத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. என்.ஐ.அதிகாரிகள், மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு சென்று, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும் பயங்கர்வாதிகள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் எல்லைகளில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு தரப்படும் பதிலடி நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது. அதே போல, பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையிலான பாதுகாப்புப் படையினரின் தயார் நிலை குறித்தும் ராஜ்நாத்சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசித்தார். ஏற்கனவே நமது கடற்படை போர்க்கப்பல்கள், விமானப் படை விமானங்கள் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தயார் நிலையில் இருக்கின்றன.
இதனிடையே பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது, இந்தக் கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார். இக் கூட்டத்தில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications