அடுத்த கொடுமை! உத்தரகாண்டில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்.. குழந்தை உட்பட 5 பேர் பலி
டேராடூன்: உத்தரகாண்டில் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 6 பேர் பயணித்த நிலையில், 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டையே சோகத்தில் தள்ளி இருக்கும் அகமதாபாத் விமான விபத்தில் தற்போது வரை 270 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் ஒரேயொரு நபர் மட்டுமே தப்பி பிழைத்திருக்கும் நிலையில், விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த ஏராளமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. இந்த விவகாரமே இன்னும் முடிவடையாத நிலையில், உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கி இருக்கிறது. டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. சார் தம் என்று சொல்லப்படும் கேதர்நாத் யாத்திரையின் 4 புனித தலங்களில் ஒன்றுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் அதிகாலையில் புறப்பட்ட நிலையில், குழந்தை உட்பட 6 பேர் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் வனப்பகுதி அருகில் சென்றிருந்த போது, திடீரென மாயமாகி இருக்கிறது. இதனை அறிந்து தேடிய நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.
விமானி, குழந்தை உட்பட 5 பேரும் உயிரிழந்திருக்கும் சம்பவம் கேதர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்த சில மணி நேரங்களிலேயே உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் முழுமையாக தகவல் வெளியாகவில்லை.
கடந்த வாரம் டேராடூனில் இருந்து கேதர்நாத் யாத்திரைக்காக 5 பேரை அழைத்து சென்ற ஹெலிகாப்டர் திடீரென நடுரோட்டில் தரையிறக்கப்பட்டது. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் முடிந்து ஒரே வாரத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications