மீண்டும் ஆட்சி அமைத்தால் 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன்... பாதியில் ஓடிய கெஜ்ரிவால் 'சத்தியம்'!
டெல்லி: மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தித் தந்தால், தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன், இடையில் ஓட மாட்டேன் என உறுதியளித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கடந்தாண்டு இறுதியில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி கட்சி. 49 நாட்கள் டெல்லியின் முதல்வராக இருந்த அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதா காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அக்கட்சி லோக்சபா தேர்தலை முன்னிறுத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியை எதிர்த்து வாரணாசியில் களமிறங்கினார் கெஜ்ரிவால். ஆனால் தோல்வி தான் கிடைத்தது.
எனவே, தற்போது மீண்டும் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில், நேற்று வடக்கு டெல்லியில் ஆதர்ஷ்நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் நடந்த ஒரு கூட்டத்தில் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

மன்னிக்க வேண்டும்...
டெல்லி ஆட்சிப் பணியில் இருந்து 49 நாட்களில் நான் பதவி விலகியதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்தது பெரிய தவறுதான். அதை மறந்து விடுங்கள்.

தனி மெஜாரிட்டி...
இனி தேர்தல் நடக்கும் போது ஆம் ஆத்மி கட்சிக்கு நீங்கள் தனி மெஜாரிட்டி பலத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியைத் தர வேண்டும். அப்படி தந்தால்தான் எங்களால் நிலையான ஆட்சியைத் தர முடியும்.

சத்தியம் செய்கிறேன்...
அடுத்தத் தடவை என்னிடம் ஆட்சியைக் கொடுத்து பாருங்கள். முன்பு போல இடையில் ஓட மாட்டேன். 5 ஆண்டுகளுக்கு முழுமையான ஆட்சியில் இருப்பேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

மின்வெட்டுபிரச்சினை...
டெல்லியில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை நீக்க மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கும் மின் உற்பத்தியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு உள்ளது. அந்த வகையில் முந்தைய காங்கிரஸ் அரசு போலவே பா.ஜ.க அரசும் செயல்படுகிறது. டெல்லியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க பா.ஜ.க. வினர் எதுவும் செய்ய வில்லை.

பாஜக அலை?
நாடெங்கும் பா.ஜ.க. அலை வீசுவதாக பா.ஜ.க. தலைவர்கள் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் டெல்லியில் சட்ட சபைத் தேர்தலை நடத்த வேண்டியதுதானே?

சவால்...
இப்போது டெல்லியில் சட்டசபை தேர்தல் நடத்தத் தயாரா என்று நான் சவால் விடுகிறேன். இனி எப்போது தேர்தல் நடத்தினாலும் நாங்கள் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications