மேற்கு வங்க பந்த்..நடமாடும் மக்களை விரட்டும் பாஜக! ஹெல்மெட்டுடன் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள்
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு நீதி கேட்டு போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் வெளியில் நடமாடும் பொதுமக்கள் மற்றும் பேருந்துகளை தடுத்து நிறுத்தி பாஜகவினர் அனுப்பி வருகின்றனர். மேலும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
கொல்கத்தாவில் பிரபலமான ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மருத்துவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அவரை அடித்து காயப்படுத்தியதும் உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.
கொலை தொடர்பாக சந்திப் ராய் என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலரும் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மருத்துவ மாணவியின் கொலையில் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதாக கொல்கத்தா காவல்துறையை கண்டித்து போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று கொல்கத்தா தலைமைச் செயலகத்தை முற்றுகையிட மாணவர்கள் சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் ஊர்வலமாக சென்ற மாணவர்களை தலைமைச் செயலகத்திற்கு சிறிது தூரம் முன்னதாக போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி மாணவர்கள் செல்ல முயல்கையில் அவர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தப்பட்டது. மேலும் தண்ணீரை பீச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக போராட்டத்தில் நேரடியாக களத்தில் குதித்துள்ளது. மேலும், மாணவர்களின் தாக்குதலை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து வழக்கம் போலவே இருந்தது.
இதனையடுத்து பாஜகவினர் சாலையில் நடமாடும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி விடுகளுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை கையெடுத்து கும்பிட்டு வீடுகளுக்கு செல்ல வேண்டும், மருத்துவ மாணவியின் மரணத்திற்கும் மாணவர்களின் தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்க போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து பணியாற்றுகின்றனர். ஓட்டுநர்கள் நடத்துனர்கள் என அனைவருமே ஹெல்மெட் உடன் பணியாற்றி வருகின்றனர். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான் என அவர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
