நேரடியாக தலையிடனும்.. மோடிக்கு போன 5 முக்கிய டிமாண்ட்.. கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கில் IMA கடிதம்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த கொலையை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு 5 முக்கிய கோரிக்கையுடன் பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவ படிப்பை படித்து வரும் மாணவி பயிற்சி டாக்டராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 8 ம் தேதி அவர் நைட் ஷிப்டில் பணியாற்றினார்.

அப்போது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தார். உடற்கூறாய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான் கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு இருப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் அசோகன் கூறுகையில், "இந்த சம்பவம் ஏற்கவே முடியாதது. இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் நாம் கேட்டது அவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம்.

இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவோம்.அவரது தலையீட்டிற்கான நேரம் கனிந்துள்ளது. நிச்சயமாக, அது (பிரதமர் மோடி தனது ஆகஸ்ட் 15 உரையில் பெண்கள் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டது) அவர் அக்கறையுடன் இருப்பதைக் காட்டும் ஒரு அம்சமாகும். பிரதமருக்கு கடிதம் எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்" என்றார்.
இந்நிலையில் தான் ஐஎம்ஏ எனும் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 5 முக்கிய கோரிக்கைகள் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 1897 ஆம் ஆண்டின் தொற்றுநோய் நோய்கள் சட்டத்தில் 2020 ஆம் ஆண்டின் திருத்தங்களை உள்ளடக்கிய சென்ட்ரல் சட்டமான 'சுகாதார சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடைசெய்யும் மசோதா 2019)' வரைவை 25 மாநிலங்களில் இன்னும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மருத்துவமனைகளின் பாதுகாப்பு என்பது ஏர்ப்போர்ட்டுகளை விட குறைவாக உள்ளது. ஏர்ப்போர்ட்டுகளை விட மருத்துவமனைகளில் குறைவான பாதுகாப்பு இருக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும். அதோடு மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாவலர்கள் நியமனங்களை உறுதி செய்ய வேண்டும்.
* பாதிக்கப்பட்ட பெண் 36 மணிநேர பணி நேரத்தில் இருந்தார். மேலும் ஓய்வறையில் பாதுகாப்பு இல்லை. அதேபோல் டாக்டர்கள் தங்கம் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இதனை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
* உரிய முறையில் நுணுக்கமாக விசாரித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சரியான அதேவேளையில் உடனடியாக நீதி வழங்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும்.
* பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்க வேண்டும்'' என்ற 5 முக்கிய கோரிக்கைகைளை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications