நீ... வா.. பத்திரிகையாளர்களிடம் நீயே பேசு... கலாமைக் காத்து பின் உயர்த்திய சதீஷ் தவான்
விசாகப்பட்டனம்: டாக்டர் அப்துல் கலாமை பெரும் இக்கட்டான நேரத்தில் காத்து பின்னர் அவரை சரியான நேரத்தில் உயர்த்தி வைத்தவர் மறைந்த டாக்டர் சதீஷ் தவான். கலாமின் திறமைக்கு மதிப்பளித்த வணங்கி சல்யூட் வைத்தவர் தவான்.
1979ல் நடந்த கதை இது. அப்போது இந்தியாவின் செயற்கைக் கோள் ஏவுவாகன திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் கலாம். சுருக்கமாக எஸ்.எல்.வி. 3 திட்டம் அது.
1980ம் ஆண்டில் ரோகினி செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் அப்போது இந்தியாவும், இஸ்ரோவும் இருந்தன. கலாம் அந்தத் திட்டத்தின் இயக்குநராக பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்.

ஆயிரக்கணக்கானோரின் உழைப்பு
ரோகினி செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதை உறுதி செய்யும் இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தனர், கலாம் தலைமையில்.

1979, ஆகஸ்ட் 10ம் தேதி
1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சோதனை ரீதியிலான ஏவுதலுக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன.

திடீர் தடங்கல்
ராக்கெட் கிளம்ப 4 நிமிடம் இருந்த நிலையில் ஏவுதலில் ஒரு தடங்கல் ஏற்பட்டது. சில கட்டுப்பாட்டு சாதனங்களில் குறைகள் இருந்ததால் ஏவுதல் நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கலாம் எடுத்த முடிவு
கலாமும், அவருடன் இருந்த நிபுணர்களும் பிரச்சினையை சரி செய்ய முடியுமா என்ற யோசனையில் மூழ்கினர். நிபுணர்கள், திட்டமிட்டபடி ஏவலாம், பிரச்சினை வராது என்றனர்.

மேனுவலுக்கு மாறிய கலாம்
இதனால் துணிந்து முடிவெடுத்த கலாம், மேனுவலாக ராக்கெட்டை இயக்க உத்தரவிட்டார். இதையடுத்து திட்டமிட்டபடி ராக்கெட் கிளம்பியது. முதல் கட்டம் வெற்றிகரமாக இருந்தது. ஆனால் 2வது கட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ராக்கெட் கடலில் போய் விழுந்தது. மிகப் பெரிய தோல்வி அது.

கலாமைக் காத்த சதீஷ் தவான்
இதையடுத்து நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாக கூறினார். அப்போது கலாம் மிகவும் இளம் வயது விஞ்ஞானி. அவரை செய்தியாளர்களின் சரமாரி கேள்விகளிலிருந்து தப்பிக்க வைக்க இப்படி தனது பொறுப்பாக அதை எடுத்துக் கொண்டார் தவான்.

ஒரே வருடத்தில் சாதித்த கலாம்
ஆனால் அடுத்த வருடமே கலாம் சாதித்துக் காட்டினார். பரீட்சார்த்த முயற்சியில் கிடைத்த தோல்வியிலிருந்து பாடம் கற்ற கலாம், அடுத்த வருடத்திலேயே முதலாவது ரோஹினி செயற்கைக் கோளை வெற்றிகரமாக இந்தியா விண்ணில் செலுத்த உதவியாக இருந்தார்.

மிகக் கடுமையான உழைப்பு
முதல் தோல்வியால் மனம் உடைந்து போய் விடாமல் தவறைக் கண்டுபிடித்து அதை சரி செய்யும் முயற்சிக்காக மிகக் கடுமையாக பாடுபட்டார் கலாம். அவரது இரவு பகலாக உழைத்த உழைப்பால் 1980ம் ஆண்டு இந்தியா தனது முதல் ரோகினி செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இவர்தான் கலாம்
அதே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளம். மீண்டும் ஒரு செய்தியாளர்கள் கூட்டம். அதே தவான். அதே கலாம். ஆனால் மாறியது காட்சி. கலாமை அழைத்த தவான், நீங்களே செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்துங்கள் என்று கூறியதோடு, இவர்தான் கலாம். இந்த வெற்றிக்கு காரணம் இவரே என்றும் பெருமைப்படுத்தினார் தவான்.












Click it and Unblock the Notifications