"இறைவனை சந்திக்கணும்.. ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்.." மசூதியில் பதுங்கிய லஷ்கர் தளபதி.. பரபரப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி லத்தீப் பட் மசூதிக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். அவரை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் வலியுறுத்தியபோதும், அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் அத்துமீறி வருகிறது. அப்படி காஷ்மீரில் சுற்றி திரிந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் இப்போது பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளார்.

தீவிரவாதி
புதன்கிழமை அதிகாலை குல்காம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது மசூதிக்குள் பதுங்கியிருந்த லத்தீப் பட் என்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய தளபதி ஆகும். அவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்பு படையினர், அவரை சரணடையுமாறு கேட்டுக்கொண்டனர்.
அப்போது அதிகாரி ஒருவர், "நாங்கள் சுற்றி வளைத்துவிட்டோம். மரியாதையாக சரணடைந்துவிடு" என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு லத்தீப் பட், "நான் அல்லாவை சந்திக்க வேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அல்லாவை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை" என்று பதிலளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அப்பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
கடந்த நவம்பர் 11ஆம் தேதி குல்காமின் அக்ரான் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் லத்தீப் பட் மற்றும் அவரது கூட்டாளி உமர் நிசார் தார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சமீப காலங்களில் எல்லையில் நடந்த மிக பெரிய தாக்குதலாக இது பார்க்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு முன்பு இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து, எங்கு தாக்குதல் நடத்தலாம் என ஆய்வு செய்த சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டனர். நவம்பர் 10ஆம் தேதி மிர் பஜார், அக்ரான், ஹப்லிஷ், கிலாம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் நடமாடியதும், தாக்குதலுக்கு பிறகு தப்பி சென்றதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
யார் இவர்?
லத்தீப் பட்டின் கூட்டாளியான உமர் நிசார் தார், திங்கள்கிழமை குல்காமில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். உள்ளூர் நபரான அவர், கடந்த 6 மாதங்களாக லத்தீப் பட்டுக்கு அடைக்கலம் மற்றும் தேவையான உதவிகளை வழங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல தாக்குதலில் தொடர்பு
மேலும், ஜூலை 22ஆம் தேதி அனந்த்நாக் பகுதியில் போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவலர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் லத்தீப் பட் தொடர்புடையதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி குல்காமில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது அவரை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
