ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கும் மோடி! கங்கை கரை வாரணாசியில் பட்டொளி வீசி பறக்கும் காவி கொடி!
வாரணாசி: லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் பிரதமர் மோடி 3-வது முறையாக களம் காண்கிறார். வாரணாசி தொகுதியில் மோடி 3-வது முறையும் வெற்றி வாகை சூடி மீண்டும் பிரதமராவதை காண காத்திருக்கின்றனர் பாஜகவினர்.
இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான காசிதான் வாரணாசி. வாரணாசி லோக்சபா தொகுதியில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கி உள்ளன. ரோஹனியா, வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கண்டோமென்ட் மற்றும் சேவாபுரி ஆகிய சட்டசபை தொகுதிகளைக் கொண்டது வாரணாசி லோக்சபா தொகுதி.

வாரணாசி தொகுதியில் தற்போது சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 80% இந்துக்கள். இஸ்லாமியர்கள் 18% உள்ளனர். வாரணாசி லோக்சபா தொகுதியில் 1991-க்கு முன்னர் வரை காங்கிரஸ், இடதுசாரிகள், ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இத்தொகுதியில் 1991, 1996, 1998, 1999 ஆகிய லோக்சபா தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் 2004 லோக்சபா தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வாரணாசியை கைப்பற்றியது.
2009-ல் மீண்டும் பாஜக வென்றது. 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பிரதமர் மோடி, வாரணாசியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து இன்றைய டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் களம் கண்டார்.
1991ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் ஶ்ரீஷ் சந்திர தீக்ஷித் 40,439 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் கிஷோரைத் தோற்கடித்தார். ஶ்ரீஷ் சந்திர தீக்ஷித் 186,333, ராஜ் கிஷோர் 145,894 வாக்குகளைப் பெற்றனர்.
1996, 1998, 1999-ல் பாஜகவின் ஷங்கர் பிரசாத் ஜெய்ஸ்வால் போட்டியிட்டு 2 முறை வென்றார். 1996-ல் 250,991 வாக்குகளையும் 1998-ல் 277,232 வாக்குகளையும் அவர் பெற்றார். 1996-ல் சிபிஎம்-ன் சார்பில் ராஷ் கிஷோரும் தீனா நாத் சிங் யாதவும் போட்டியிட்டு தோற்றனர். 1999-ல் காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
ஆனால் 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாரணாசியில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் குமார் மிஸ்ரா வென்றார். அத்தேர்தலில் 206,904 வாக்குகளை ராஜேஷ் குமார் மிஸ்ரா பெற்றார். பாஜகவின் ஷங்கர் பிரசாத் ஜெய்ஸ்வால் 149,468 வாக்குகள் மட்டுமே பெற்றார். 57,436 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் பாஜக தோற்றது.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இத்தொகுதியில் களம் கண்டார். அவரை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி போட்டியிட்டார். முரளி மனோகர் ஜோஷி 203,122 வாக்குகளையும் முக்தார் அன்சாரி 185,911 வாக்குகளையும் சமாஜ்வாதி க்ட்சியின் அஜய் ராய் 123,874 வாக்குகளையும் பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முக்தார் அன்சாரியிஅ விட வெறும் 17,211 வாக்குகள் வித்தியாசத்தில்தான் முரளி மனோகர் ஜோஷி வென்றார்.
2014-ம் ஆண்டு முதல் மோடி போட்டியிடுவதால் அகில உலகமும் உன்னிப்பாக கவனிக்கும் தொகுதியான வாரணாசி. அதுவும் 2014-ம் ஆண்டு மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் கண்டார். காங்கிரஸின் அஜய் ராய் களத்தில் இருந்தார். 2014-ல் மோடி 581,022 வாக்குகளையும் கெஜ்ரிவால் 209,238, அஜய் ராய் 75,614 வாக்குகளையும் பெற்றனர். வாரணாசியில் மோடி முதல் முறையாக வென்று நாட்டின் பிரதமரனார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் வாரணாசியிலேயே மீண்டும் களம் கண்டார் மோடி. 2019-ல் மோடியை எதிர்த்தவர்கள் சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ், காங்கிரஸின் அஜய் ராய். 2019 தேர்தலில் மோடி 674,664, ஷாலினி யாதவ் 195,159, அஜய் ராய் 152,548 வாக்குகளைப் பெற்றனர். பிரதமர் மோடி 2-வது முறையாக வாரணாசியில் வாகை சூடினார்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி வாரணாசியில் களம் காண்கிறர். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் அஜய் ராய், வாரணாசி தொகுதியில் 4-வது முறையாக களம் காண்கிறார். பிரதமர் மோடி வாரணாசியில் ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்து 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications