ஜெகனுக்கு பாஜக வைத்த ‛செக்’.. ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனாவுடன் தொகுதி பங்கீடு சக்சஸ்!
அமராவதி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளதோடு, தொகுதி பங்கீடும் சுமூகமாக நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சியாகி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. ஆந்திராவை பொறுத்தமட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் சேர்ந்து நடைபெற உள்ளது.

தற்போது அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தனித்தே போட்டியிட உள்ளது. மாறாக பாஜக பெரிய கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வந்தது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.
இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2 கட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடும் சுமூகமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திராவை பொறுத்தவரை மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் பாஜக 8 முதல் 10 இடங்களிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 10 முதல் 12 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 23 இடங்களை கைப்பற்றியது. தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களில் வாகை சூடியது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எந்த தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - தெலுங்கு தேசம் - ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால் அது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனையாக உருவாகலாம். இதனால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். அதேபோல் இந்த கூட்டணியால் காங்கிரஸ் கட்சியும் ஷாக்காகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications