கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு... டெல்லியில் துணை நிலை ஆளுநரே நிர்வாக தலைவர்- ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம். நிர்வாக தலைவராகவும் அவரே இருப்பார். டெல்லி அமைச்சரவையின் முடிவு துணைநிலை ஆளுநரை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி நிர்வாகத்தின் தலைவராக துணை நிலை ஆளுநர் இருப்பதையும், அவருக்கும் உள்ள அதிகாரத்திற்கு எதிராகவும் டெல்லி அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டெல்லியில் துணை நிலை ஆளுநர் - முதல்வர் கெஜ்ரிவால் இடையே அதிகாரப் போட்டி முற்றியுள்ளது.

டெல்லி மாநில ஊழல் தடுப்பு பிரிவுக்கு அம்மாநில காவல் துறை இணை ஆணையர் எம்.கே.மீனாவை துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கடந்த ஆண்டு நியமித்தார். மேலும் ஒரு இணை ஆணையர் மற்றும் 7 காவல் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சருக்கே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மாநில ஊழல் தடுப்பு பிரிவு முதலமைச்சர் கீழ் உள்ளதாகவும் அதில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகமும், ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உள்ளது என்றும் முதலமைச்சருக்கு கிடையாது என்றும் ஏற்கனவே கூறியிருந்தது.
டெல்லி மாநில உள்துறை செயலாளர் நியமனத்தில் தொடங்கிய துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் இடையேயான மோதல் தொடர்ந்து முற்றிய நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக மாநில உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
ஆளுநருக்கு எதிராக கெஜ்ரிவால் அரசு தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம். நிர்வாக தலைவராகவும் அவரே இருப்பார். டெல்லி அமைச்சரவையின் முடிவு துணைநிலை ஆளுநரை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் யோசனையை துணைநிலை ஆளுநர் கேட்க அவசியம் இல்லை. அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் அதிகார பகிர்வு உள்ளிட்டவைகளில் கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி நிர்வாகத்தின் தலைவராக துணை நிலை ஆளுநர் இருப்பதையும், அவருக்கும் உள்ள அதிகாரத்திற்கு எதிராகவும் டெல்லி அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது கெஜ்ரிவால் அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் ஆம்ஆத்மி அரசு - துணைநிலை ஆளுனர் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
அமைச்சரவையின் யோசனையை துணை நிலை ஆளுநர் கேட்கவேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறி வந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நாராயணசாமிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications