'பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாக கூறுபவர்கள் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள்'.. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
போபால்: நாட்டில் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை அதிகமாக இருப்பதாக கூறுபவர்கள் தாராளமாக தாலிபான்கள் ஆட்சி புரியும் ஆப்கானிஸ்தானுக்கு செல்லலாம் என்று மத்திய பிரதேச பாஜக தலைவர் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கத்னி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராம்ரதன் பயல் கடந்த சுதந்திர தினத்தன்று இவ்வாறு பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க தலைவர் ராம்ரதனுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாவட்ட தலைவர்
உள்ளூர் நிருபர் ஒருவர் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்தும், பெட்ரோல் விலை குறித்தும் பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ராம்ரதன் பயல் கூறுகையில், ' கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலை நாட்டை தாக்கும் நேரத்தில் பெட்ரோல் விலை குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. கொரோனா வைரஸின் மூன்றாவது அலை நாட்டைத் தாக்க வாய்ப்புள்ளது, நீங்கள்(நிருபர்) பெட்ரோலைப் பற்றி பேசுகிறீர்கள். நாடு என்ன நெருக்கடியைச் சந்திக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா?

ஆப்கானிஸ்தான் செல்லுங்கள்
ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்குதான் விற்கப்படுகிறது. ஆனால் அதைப் பயன்படுத்த யாரும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதாக நினைப்பவர்கள் தாராளமாக ஆப்காப்கானிஸ்தான் செல்லலாம் . அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மலிவானவை. அங்கு சென்றவுடன், இந்தியாவின் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று ராம்ரதன் பயல் கூறினார். இவ்வாறு கூறும்போது பாஜக மாவட்ட தலைவரும்,அவரைச் சுற்றியுள்ள அவரது ஆதரவாளர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. மாஸ்க்கும் அணியவில்லை.

இது முதன்முறை அல்ல
நாட்டின் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பும்போது பா.ஜ.க தலைவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பது இது முதன்முறை அல்ல. கடந்த மாதம் சத்தீஷ்கரைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் பிரிஜ்மோகன் அகர்வால், 'விலைவாசி உயர்வு ஒரு தேசிய பேரிடர் என்று நினைத்தால், பணவீக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும், பெட்ரோல் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.

சைக்கிள் பயன்படுத்த வேண்டும்
இதற்கு முன்னதாக மத்தியப் பிரதேச எரிசக்தி அமைச்சர் பிரத்யும் சிங் தோமர் இந்தூரில் நிருபர்களிடம் பேசுகையில், 'எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால் சாமானியர்கள் சைக்கிள் பயன்படுத்த வேண்டும். வீட்டு வேலைகளுக்கு சைக்கிள் பயன்படுத்துவதை நிறுத்தியதால் எரிபொருள் விலை உயர்கிறது' என்று தெரிவித்து இருந்தார்.மேலும் மத்திய பிரதேச அமைச்சர் சஞ்சய் பதக் சுதந்திர தினத்தன்று தடுப்பூசி தொடர்பாக ஒரு சர்ச்சை கருத்தை கூறி இருந்தார்.

ஆண்மைக் குறைவு இல்லை
''நீங்கள் நாடு, கிராமம், நகரம் மற்றும் உங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க விரும்பினால் உடனடியாக தடுப்பூசி போடுங்கள். தடுப்பூசி ஆண்மைக்குறைவுக்கு வழிவகுக்கும் என்று சில முட்டாள்கள் சொல்வதால் தவறாக நினைக்காதீர்கள். தடுப்பூசி போட்ட பிறகு ஆண்மைக் குறைவு பற்றி சிலர் என்னிடம் சொன்னபோது நானும் பதற்றமடைந்தேன். நான் 3-4 மாதங்களுக்குப் பிறகு சோதித்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை'' என்று அமைச்சர் சஞ்சய் பதக் கூறி இருந்தது குறிப்பிடத்த்தக்கது.












Click it and Unblock the Notifications