டிகிரி வாங்கி எந்த பயனும் இல்லை.. மாணவர்கள் பஞ்சர் கடை வைக்கலாம்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
போபால்: டிகிரி வாங்கி ஒரு பயனும் இல்லை என்றும், மாணவர்கள் பஞ்சர் கடை வைத்து பிழைத்து கொள்ளலாம் என்றும் மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி திறப்பு விழாவில் இப்படி பேசியதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசி தரூரும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மோகன் சிங் உள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜவை சேந்த எம்.எல்.ஏவான பன்னால் லக்ஷ்யா, கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:-

மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பன்னால் லக்ஷ்யா. இவரது தொகுதிக்கு உள்பட்ட இடத்தில் பிஎம் காலேஜ் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியை காணொலி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்எல்ஏ பன்னால் லக்ஷ்யா மாணவர்களுக்கு கொடுத்த அறிவுரைதான் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
பாஜக எம்எல்ஏ கூறியதாவது:- பிஎம் காலேஜ் ஆஃப் எக்ஸலன்ஸ் கல்லூரியை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். ஒரு விஷயத்தை எப்போதும் மாணவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரியில் படித்து பெறும் பட்டங்களால் எந்த பயனும் இல்லை. எனவே, அதற்கு பதிலாக பைக் பழுது பார்க்கும் கடையை நடத்தி வாழ்க்கையில் பிழைக்க கற்றுக்கொள்ளலாம்" என்றார்.
பாஜக எம்.எல்.ஏவின் இந்த கருத்துக்கு மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை இது தெளிவாக பிரதிபலிக்கிறது என்று கூறினர்.
அதேபோல பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
கல்வியின் நிலை குறித்தும் வேலை வாய்ப்பு இல்லாதது பற்றியும் அனைவரும் கவலை அடைந்திருக்கும் நிலையில், பாஜக எம்எல்ஏவின் இந்த ஒப்புதல், சொந்த அரசின் பாசாங்கு தனத்தை காட்டுகிறது. இந்தியாவின் எதிர்காலம் பற்றி சிறந்த சிந்தனையை வைத்திருக்கும் கட்சி எது என இன்னும் யாராவது கேட்க வேண்டுமா? என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications