பாஜகவின் “மாஸ்டர் மைண்ட்”.. ஹரியானாவில் ஜேஜேபி கூட்டணி பிரிவின் பின்னணியில் 2024 தேர்தல் தந்திரம்
சண்டிகர்: ஹரியானாவில் ஜேஜேபி உடனான கூட்டணியை பாஜக முறித்துக்கொண்டதன் பின்னணியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான மிக முக்கிய நகர்வை அது மேற்கொண்டு இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) கட்சி தனித்துப் போட்டியிட்டு 10 தொகுதிகளை வென்றது. அங்கு ஆளும் பாஜக 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் 31 தொகுதியிலும் வென்றதால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை .இதனால் கிங்மேக்கர் ஆக மாறினார் துஷ்யந்த் சவுதாலா. அவர் எந்த கட்சிக்கு ஆதரவளிக்கிறாரோ அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நிலை உருவானது.

அவரது விரல் "கையை" தட்டி விட்டு "தாமரை" பக்கம் திரும்பியது. அவரது தயவால் பாஜக ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. மனோகர் லால் கட்டார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார். பாஜகவின் மீட்பராக வந்த ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் கலால் மற்றும் வரித் துறை, வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை, வணிகம் மற்றும் உணவுத்துறை போன்ற முக்கிய இலாக்காக்கள் ஜேஜேபி கட்சியின் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டன.
ஹரியானா மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக துஷ்யந்த் சவுதாலா வளர்ந்து இருக்கும் நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு ஜேஜேபி கட்சி பாஜகவிடம் கோரியது. குறிப்பாக ஹிசார் மற்றும் பிவானி - மகேந்திரகர் ஆகிய 2 தொகுதிகளை துஷ்யந்த் சவுதாலா கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் 10 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக இரண்டு தொகுதிகளை விட்டுத்தர முன்வருமா?
கூட்டணியை விட 2 தொகுதிகள் முக்கியம் என முடிவு செய்த பாஜக துசியந்த் சவுதாலாவையே கழற்றிவிட துணிந்தது. விளைவு பாஜக ஜேஜேபி கட்சிகளின் கூட்டணி முறிவு. இது மட்டும் இன்றி மற்றொரு விஷயமும் பாஜகவின் கண்களை உறுத்தியிருக்கிறது. அதுதான் துஷ்யந்தின் வளர்ச்சி. பாஜகவுக்கு இணையான அதிகார மையமாக தன்னை அவர் காட்டிக்கொள்ள முயன்றதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். அதேபோல் கடந்தாண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் ஜேஜேபி கட்சி படுதோல்வி அடைந்ததும் இந்த கூட்டணி முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் அரியானா மாநில பாஜகவின் மூத்த தலைவரான பிரேந்தர் சிங்கின் மகனும் பாஜக ஹிசார் தொகுதி எம்பியுமான பிரஜேந்திர சிங் ஜேஜேபி - பாஜக கூட்டணி முடிவு எதிர்த்து கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இது ஒருபுறம் இருக்க ஜேஜேபி கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் எழுந்தன. டெல்லியில் துஷ்யந்த் தலைமையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களில் 6 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். பாஜக மீதான விவசாயிகளின் அதிருப்தி காரணமாக அதன் கூட்டணியை ஜேஜேபி முறித்துக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் எம்எல்ஏக்களான கௌதம் மற்றும் பப்லி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
இப்படி கூட்டணி முடிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரதான காரணமாக சொல்லப்படுவது ஒன்றுதான். அதை காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடாவும் கூறி இருக்கிறார். பாஜக கூட்டணி முறிந்த காரணத்தால் ஜேஜேபி கட்சி 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும். இதன் மூலம் அக்கட்சி பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்கும் வேலையை செய்யும். 'இது எல்லாம் பாஜகவின் உத்தரவின் பேரிலேயே நடைபெறுகிறது' என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications