மலாலா யூசஃப்சாய் இஸ்லாமிய முறைப்படி திருமணம் - எளிய முறைப்படி பிரிட்டனில் நடந்தது
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற செயல்பாட்டாளர் மலாலா யூசஃப்சாய் திருமணம் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து முடிந்துள்ளது.
அசர் மாலிக் என்பவரை மலாலா யூசஃப்சாய் மணம் முடித்துள்ளார். தங்கள் திருமண நாள் தமது வாழ்வின் ஒரு மதிப்புமிக்க நாள் என்று 24 வயதாகும் மலாலா யூசஃப்சாய் கூறியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தமது பள்ளிக் காலத்திலிருந்தே பெண்கள் கல்விக்கான செயல்பாட்டாளராக இருந்தவர். மலாலா 2012ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
அதன்பின்பு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் கவுன்டியில் வசித்து வருகிறார்.
"எங்களது குடும்பத்தினர் கலந்து கொண்ட சிறிய நிக்கா நிகழ்வில் அசரும் நானும் வாழ்விணையர்களாகத் திருமணம் செய்து கொண்டோம்," என்று செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மலாலா.
இந்தப் பயணத்தில் ஒன்றாகப் பயணிப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Malala/status/1458128016157052938
பாகிஸ்தானில் தாலிபன்களால் மலாலா சுடப்பட்ட பொழுது அவருக்கு வயது 15.
மலாலா மற்றும் அவரது சக மாணவிகள் சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் ஒன்றை ஸ்வாட் பள்ளத்தாக்கின் வடமேற்குப் பகுதியில் வழிமறித்த தீவிரவாதிகள் அதிலிருந்தவர்களைத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
- பலதார திருமணம்: "எனக்கு பல காதலர்களும் துணைவர்களும் தேவைப்படுவது ஏன்?"
- பழிக்குப் பழி: கணவரைக் கொன்றவரை திருமணம் செய்துகொண்டு சுட்டுக் கொன்ற பெண்
இந்தத் துப்பாக்கித் தாக்குதலில் மலாலா யூசஃப்சாய் மற்றும் அவரது சக மாணவர்கள் இருவர் காயமடைந்தனர்.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் மோசமான இந்தத் தாக்குதலிலிருந்து மீண்ட பின்பு மலாலா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிட்டனின் பர்மிங்காம் நகருக்குக் குடிபெயர்ந்தனர். இந்த நகரம் தனக்கு தமக்கு இரண்டாவது வீடு என்று மலாலா கூறுகிறார்.
மிகவும் இளம் வயதில் நோபல், ஐ.நா தூதர்
மலாலா யூசஃப்சாய்க்கு 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசின் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் கௌரவிக்கப்பட்டவர் மலாலாதான்.
நோபல் பரிசை வென்றபின் மலாலா யூசஃப்சாய், மிக இளம் வயதில் ஐ.நாவின் அமைத்திக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.
கலை, இலக்கியம், அறிவியல், பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது பொது வாழ்வுடன் தொடர்புடைய பிற துறைகளிலிருந்து ஐ.நாவின் அமைதிகான தூதராக தேர்வு செய்யப்படுவர்.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா யூசஃப்சாய் உயர் கல்வியை முடித்தார். படித்து முடித்த பின்பு மனித உரிமை செயற்பாட்டாளராக தற்போது இயங்கி வருகிறார் மலாலா.
- "பெண்களும் பல ஆண்களை மணக்கலாம்" - தென்னாப்பிரிக்காவில் சட்ட முன்மொழிவால் சர்ச்சை
- உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்ற கூக்குரலில் குரலை இழந்த ஒரு இளம் ஜோடியின் கதை
ஆப்ஃகன் அகதிகளுக்கு மேலதிக உதவிகள் கிடைப்பது, பெண்கள் கல்வி உள்ளிட்டவற்றுக்கு மலாலா குரல் கொடுத்து வருகிறார்.
பிரிட்டனில் சட்டப்பூர்வ ஒப்பந்தமாகச் செல்லாது என்றாலும், நிக்கா நிகழ்வு இஸ்லாமிய திருமணத்தின் முதல் படியாக உள்ளது.
இதன்பின் ஒரு தனி நிகழ்வு நடத்தப்படும். அது எப்போது நடக்கும் என்று மலாலா இன்னும் தெரிவிக்கவில்லை.
'ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?'
கடந்த காலங்களில் திருமண உறவு மீதான தமது நம்பிக்கையின்மையை மலாலா வெளிப்படுத்தியுள்ளார்.
வோக் (Vogue) இதழுக்கு ஜூலை மாதம் அளித்த பேட்டி ஒன்றில்,"மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. உங்கள் வாழ்வில் ஓர் இணையர் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஏன் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கிறது? அது ஏன் ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக மட்டும் இருக்கக்கூடாது," என்று கேள்வி எழுப்பியிருந்தார் மலாலா.
"ஆனால் இதைப் போன்று எதையும் சொல்லக்கூடாது. நீ நிச்சயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் மிகவும் அழகானது," என்று எனது தாயார் கூறியுள்ளார் என்றும் அந்தப் பேட்டியில் மலாலா குறிப்பிட்டிருந்தார்.
மலாலாவின் திருமணச் செய்தி வெளியான பின்பு பல்லாயிரம் பேர் அவருக்கு இணையம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- உணவுக்காக குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் - பிபிசியின் நேரடி ரிப்போர்ட்
- "மாத்துங்க தலைமை செயலரை" - அமித் ஷாவுக்கு அழுத்தம் கொடுக்கும் மிசோரம் முதல்வர்
- சிங்கப்பூரில் ஊசலாடும் மலேசிய தமிழரின் உயிர் - மரண தண்டனை மீண்டும் தள்ளிவைப்பு
- மாற்று ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர் மர்ம சாவு - என்ன நடந்தது?
- ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் குழுவை ஒடுக்க திணறும் தாலிபன் - கள நிலவரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















Click it and Unblock the Notifications