வீல் சேரில் உட்கார்ந்து கொண்டே.. பாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டிய மம்தா பானர்ஜி.. அசத்தல் வெற்றி!
கொல்கத்தா: உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், படுத்துக்கொண்டே வெற்றி பெற்றார் என்று எம்ஜிஆரின் தேர்தல் வரலாற்றை பற்றி அதிமுகவினர் புகழ்ந்து சொல்வது உண்டு.
இப்போது மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி, வீல் சேரில் அமர்ந்தபடி தனது கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி உள்ளார்.
சக்கர நாற்காலியில் சுற்றிவந்து இவர் செய்த பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களும் ஈடுகொடுக்க முடியாமல் போனதால்தான் பாஜக அங்கு 3 டிஜிட் இலக்கத்தை தாண்ட முடியாமல் தோற்றுப் போய் உள்ளது.

8 கட்ட தேர்தல்
294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது முதலே மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி ஆரம்பித்தது. கடந்த முறை ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று நிலையில், தற்போது இரண்டு கட்டங்கள் அதிகரிப்பதோடு ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டது.

வீர வசனம்
கடந்த லோக்சபா தேர்தலில் 18 தொகுதிகளை பாஜக வெற்றி பெற்றதால் , அந்த உத்வேகத்தில் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்றும், குறைந்தது, 200 தொகுதிகளில் வென்று விடுவோம் என்றும் பாஜகவின் பல்வேறு தலைவர்களும் வீர வசனம் பேசினர்.

மம்தா மீது தாக்குதல்
திரிணாமுல் காங்கிரஸின் பலம் வாய்ந்த தலைவராக இருந்த சுமந்து அதிகாரியை தங்கள் பக்கம் இழுத்தது பாஜக. இதேபோல பல முன்னணி தலைவர்கள் பாஜக பக்கம் இழுக்கப்பட்டனர். இப்படியான நெருக்கடிக்கு மத்தியில்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் அவர் காலில் காயம் ஏற்பட்டதால் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

சக்கர நாற்காலி
ஒரு பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மாநில மக்களின், கண் முன்பாக காட்டும் வகையில் சக்கர நாற்காலி பிரச்சாரம் அமைந்திருந்தது. இது பெண்கள் மட்டும் இல்லாமல் , ஒட்டுமொத்த மேற்குவங்க வாக்காளர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத்தான் மம்தா பானர்ஜிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

மம்தா பானர்ஜி அமோகம்
இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் வெற்றி அல்லது முன்னிலை வகிக்கிறது. பாஜக 78 தொகுதிகளில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மேற்குவங்கத்தில் மலர்ந்துள்ளது. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் மம்தா பானர்ஜி. தெருத்தெருவாக இறங்கி பாதயாத்திரை செல்லாமல் , சக்கர நாற்காலியில் இருந்தபடி இந்த வெற்றியை சாத்தியமாக்கி உள்ளார் வங்கப்புலி என்று புகழப்படும் மம்தா பானர்ஜி.












Click it and Unblock the Notifications