Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

150 ஆண்டுகள் ஓடிய டிராம் வண்டிக்கு முடிவு கட்டிய மம்தா! இது தாகூர் பயணித்த தரமான வண்டி?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு முதன்முதலாக மேற்குவங்கத்தில்தான் டிராம் வண்டிகளை இயக்க ஆரம்பித்தது. அன்றைக்கு உலகில் நவீன வசதியாக இருந்த டிராம் வண்டிகள் இன்று பழமையின் அடையாளமாக மாறிப்போய் உள்ளது.

கொல்கத்தாவின் மிகப் பழமையான அடையாளமான டிராம் வண்டிகளை மம்தா அரசு இனி இயக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால் ஒரு பாரம்பரிய சின்னமான டிராம் ரயில் வண்டி பயணத்திற்கு மூடுவிழா நடைபெற உள்ளது. சிலருக்கு இது வெறும் செய்திதான். பலருக்கு நகரம் முன்னேற்றம் முக்கியமாகக் கூட தெரியலாம். ஆனால், கொல்கத்தா சாலைகளில் போடப்பட்டுள்ள டிராம் தண்டவாளங்கள் வெறும் இரும்புப் பாதைகள் மட்டும் அல்ல. ஒரு நூற்றாண்டின் வரலாற்று அடையாளம். இந்த டிராம் பயணம் பற்றி வங்காள இலக்கியங்கள் நிறையப் பேசி இருக்கின்றன. 100 ஆண்டுகள் முன்பு கவிதைக்காக நோபல் பரிசை வென்ற ரவீந்திரநாத் தாகூர், 'One Night I had a Dream' என்ற கவிதையில் டிராம் பாதைகள் எப்படி நகரத்தை உருட்டிக்கொண்டு நகர்கின்றன என்பதைப் பற்றி கவித்துவமாக எழுதி இருக்கிறார்.

kolkata mamata banerjee

இந்திய சினிமாவின் பிதாமகன் சத்ய ஜித்ரே 1963 ஆம் ஆண்டு அவர் இயக்கிய 'மகாநகர்' என்ற வங்காள படத்தில் ஓபனிங் சீனாக இந்த டிராம் வண்டியைப் பயன்படுத்தி இருக்கிறார். மின் கம்பிகளைப் பற்றிக் கொண்டு நடைபோடும் டிராம் மின் கம்பிகளைத்தான் படத்தின் தொடக்கக்காட்சி பிரதானப்படுத்தி இருக்கும். அதை லேசாக வங்காளிகள் மறந்திருக்க மாட்டார்கள்.

வங்காள மொழியில் மகாகவியாகக் கருதப்படும் தாகூருக்கு லண்டனில் கூட வீடு இருந்தது. 1912இல் அவர் சில மாதங்கள் வாழ்ந்தார். ஆகவே, அந்த வீட்டை வாங்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில முயற்சிகளை எடுத்தார். லண்டனில் உள்ள பழமையான தாகூர் வீட்டை வாங்க வேண்டும். அந்தப் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என நினைத்த மம்தா, சொந்த மாநிலத்தில் தாகூர் புகழ்ந்து பாடிய டிராம் ரயிலைக் கைவிட்டுவிட்டார். இதனால் நகரம் முழுக்க 100 ஆண்டுகளுக்கும் மேலாக 'டிங்..டிங்' எனக் கேட்டுக் கொண்டிருந்த மணி சத்தம் இனி ஒலிக்கப் போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக டிராம் வண்டி வசதியைப் பெற்ற நவீனமான நகரம் கொல்கத்தா. இந்த டிராம் போக்குவரத்து உள்ள கடைசி மாநிலமாகவும் இதுவரை இதுவே இருந்தது. கிட்டத்தட்ட டிராம் வண்டிகள் இந்த கிரகத்தில் 151 ஆண்டுகளாகப் பாதையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று வந்தன. உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் டிராம் வண்டிகளை நிறுத்தாமல் இயக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், நகரம் வளர்ந்துள்ளதால், கார் மற்றும் வாகனங்களின் வரத்து பெருகியுள்ளதால் டிராம் இயங்குவது கஷ்டம் என்று மற்றொரு தரப்பு வாதிடுகிறது. இதனிடையே கல்கத்தா டிராம் பயனர்கள் சங்கம் ஹாங்காங் போன்று உள்ள மற்ற நெரிசலான நகரங்களைச் சுட்டிக்காட்டி நியாயப்படுத்தி வருகின்றது.

kolkata mamata banerjee

ஆனால், ஆண்ட்ராய்டு மொபைலைப் போல, அசுர வேகத்தில் சீறி பாயும் மெட்ரோ ரயில்கள் வந்துவிட்ட காலத்தில் யார்தான் டிராம் பயணத்தை நிறுத்தாதே என்று அரசுக்கு அழுத்தம் தரவா போகிறார்கள்? அந்தளவுக்கு உலகம் மெதுவாகவா முன்னேறிக் கொண்டு வருகிறது? இன்றைக்குப் பல மாநிலங்களில் மெட்ரோ ரயில்கள் வந்துவிட்டன. பல தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையை விரும்புகின்றன. அதனால் மாநிலமும் அதைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படியான காலத்தில் வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் நவீன அடையாளமாக இருந்த டிராம் இன்று பழமையின் அடையாளமாக மாறிவிட்டது.

ஆகவேதான், 90களின் இறுதிப் பகுதியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்தை முன்வைத்து இயங்கிவந்த கம்யூனிஸ்ட் கட்சிகூட இதை 'காலாவதியானது' என்று அறிவிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கிவந்த டிராம் இப்போது 2 அல்லது 3 தடங்களில் மட்டுமே பயணம் செய்து வருகிறது. மற்றொரு பக்கம் டிராம் ஊழியர்கள் வெறும் 30 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கினார் இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த டிராம் வண்டிகளை இயக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

டிராம் பாதைகளைப் பொறுத்தவரை அனைத்தும் பழைய வழித்தடங்கள்தான். ஒரு பாதைகூட புதியதாகப் போடப்பட்டது இல்லை. வண்டிகள் கூட பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளன. அதைக் காப்பாற்ற அரசு ஒன்றையும் செய்யவில்லை. இப்போது டிராம் வண்டிகளைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் பேர் வயதானவர்கள். அடுத்து பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வரும் தாய்மார்கள். இதிலிருந்து அரசுக்கு கிடைக்கும் வருமானம் சொற்பம்தான்.

ஆனால், அரசாங்கம் உடனடியாக இதை நிறுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் டிராம் பயணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. அது விசாரணையில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அதுவும் நிலுவையில் உள்ளது. இதில் சோகமான விசயம் என்னவென்றால் டிராம் வண்டிகளுக்குள் மஞ்சள் பலகையில் ,'100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் தரவேண்டும். ஏனெனில் அதற்குச் சில்லறை கொடுக்க முடியாது' என்று ஒரு வாசகம் காணப்படுகிறது. இது வெறும் வாசகம் அல்ல. அதன் வருமானம் எந்தளவுக்குக் கீழே உள்ளது என்பதைக் காட்டக் கூடிய கண்ணாடிதான் இது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+