மகளை பார்த்துக் கொள்ளுங்கள்: மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தந்தை தற்கொலை
காசியாபாத்: பொருளாதாரப் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், மரணத்துக்குப் பின்னர் என் மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் உத்தரபிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் திவாரி. 35 வயதான இவர், கடந்த சில ஆண்டுகளாக பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டு நிம்மதியின்றி தவித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு மசூரி பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், ஓம் பிரகாஷ் திவாரியின் சட்டைப் பையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில், குஜராத் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அந்த கடித்தில், ‘அன்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே..! நீங்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆகப் போகிறீர்கள். பொருளாதாரப் பிரச்னையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மரணத்துக்குப் பின்னர் என் மகளை பார்த்துக் கொள்ளும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
கடிதம் எழுதிவைத்துவிட்டு ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசியாபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
