இதெல்லாம் நம்ம இந்தியாவில்தான் நடக்கும்.. இறப்பு சான்றிதழை காணோம்.. விளம்பரம் கொடுத்த நபர்.. ட்வீட்
குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இறப்பு சான்றிதழை காணவில்லை என செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தங்களது நகைகள், பணம், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை காணாமல் போனால் காவல் நிலையத்தில் புகார் அளிப்போம். அது போல் ஏதாவது முக்கிய ஆவணங்கள் காணாமல் போய்விட்டால் அது குறித்து செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பது வழக்கம்.
பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், வீட்டு சான்றிதழ்கள், கல்லூரி சான்றிதழ், அரசின் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை காணாமல் போனால் அதுகுறித்த விளம்பரம் செய்யப்பட்டு அதன் மூலம் நிறைய பேருக்கு இழந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றன.

மிஸ்ஸிங்
இதற்காக நாளிதழ்களில் மிஸ்ஸிங் என்ற காலமே இருக்கும். அந்த வகையில் ஒரு செய்தித் தாள் விளம்பரத்தில் காணாமல் போனவை என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தை கண்டு ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அதாவது அந்த விளம்பரத்தில் லும்டிங் பஜாரில் காலை 10 மணிக்கு செப்டம்பர் 7ஆம் தேதி எனது இறப்பு சான்றிதழை தவறவிட்டுவிட்டேன்.

திருப்பி கொடுத்தல்
அதை திருப்பி கொடுக்குமாறு ரஞ்சித் சக்ரவர்த்தி என்பவர் தனது முகவரியையும் காணாமல் போன சான்றின் பதிவு எண்ணையும் கொடுத்து விளம்பரம் கொடுத்துள்ளார். இதை பகிர்ந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா , இப்படியெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

சிரிக்கும் எமோஜி
அதில் சிரிக்கும் எமோஜிகளையும் போட்டுள்ளார். மேலும் இவரது இந்த பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள், சான்றிதழ் காணாமல் போய்விட்டது ஓகே ஒருவேளை கிடைத்துவிட்டால் நான் எங்கே கொண்டு வர வேண்டும், சொர்க்கத்திற்காக, நரகத்திற்காக என கேள்வி எழுப்பியுள்ளனர். அது போல் நீங்கள் கொடுத்துள்ள அட்ரஸ் மேலோகத்தின் அட்ரஸா என கேட்டும் பதிவிட்டுள்ளனர்.

பிறப்பு சான்றிதழ்
ஒரு சிலர் ஒரு வேளை தனது பிறப்பு சான்றிதழை அந்த நபர் தவறவிட்டிருக்கலாம் என்றும், அதை விளம்பர பிரிவில் தவறுதலாக இறப்பு சான்றிதழ் என டைப் செய்து ப்ரூஃப் பார்க்காமல் அப்படியே வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே இதில் தவறு எங்கே நடந்தது என தெரியவில்லை. மேலும் ரஞ்சித்தின் தந்தை, தாய் உள்ளிட்ட முக்கிய உறவினர்களின் இறப்பு சான்றிதழாக கூட இருக்கலாம் என சில நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications