மணிப்பூரில் தீராத பதற்றம்.. 2 மாணவர்கள் படுகொலை வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது! சிபிஐ அதிரடி
இம்பால்: மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த ஜூலை மாதம் மாயமான ஒரு மாணவனும், மாணவியும் படுகொலை செய்யப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் 2 பேரை 2 பெண்கள் உள்பட 4 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.
மணிப்பூர்.. கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வரும் மாநிலமாக மாறிப்போய் உள்ளது. இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். மணிப்பூரை பொறுத்தமட்டில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர்.

இங்கு 2 இனக்குழுவினர் இடையேயான மோதல் என்பது தான் வன்முறைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதாவது குக்கி இனக்குழு மக்களை போல் தங்களையும் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி குழுவினர் வலியுறுத்தினர்.
இதற்கு குக்கி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் கடந்த மே மாதம் 3ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் என்பது மாநிலம் முழுவதும் பரவி கலவரக்காடாக மாறியுள்ளது. இருதரப்பினரும் துப்பாக்கிச்சண்டை போட்டு வருகின்றனர். அதோடு குக்கி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தற்போது போலீசார், ராணுவம் கண்காணிப்பு என மணிப்பூர் மிகவும் பதற்றமாகவே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க வன்முறை மட்டும் நிற்கவே இல்லை. இதனால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி பிற இடங்களில் தஞ்சமடைந்து்ளனர். மேலும் 150க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தான் மைத்தேயி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி மாயமானார்கள். மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலை சேர்ந்த மாணவர் பிஜாம் ஹேமன்ஜித் (வயது 20) மற்றும் மாணவி ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி (17) ஆகியோர் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணைக்கைதிகளாக்கப்பட்டனர். அதன்பிறகு கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இது மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவர்கள் கொலை குறித்தும் அவர்கள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். சிபிஐ இயக்குனர் மணிப்பூர் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் தான் 2 மாணவர்கள் கொலை வழக்கில் 4 பேரை சிபிஐ இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 2 2 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்கள் தலைநகர் இம்பாலில் இருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது.
மேலும் தற்போது 4 பேரும் கைதான சுராசந்த்பூர் தான் மணிப்பூர் வன்முறைக்கான முதல் காரணமாகும். இங்கு தான் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்து மாநிலம் முழுவதும் பரவியது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications