பற்றி எரியும் மணிப்பூர்..பாதுகாப்பு பணியில் ராணுவம்..பதற்றத்திற்கு காரணம்?..5 பாயிண்ட்களில் விளக்கம்
இம்பால்: மணிப்பூரில் மைத்தேயி இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பான போராட்டத்தில் வன்முறை வெடித்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களை விரிவாக இங்கே பார்க்கலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். மலைகளையும் சமவெளிகளையும் கொண்ட அழகிய மாநிலமான மணிப்பூர் தற்போது பற்றி எரிகிறது. மணிப்பூரில் உள்ள மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க குக்கி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருதரப்பும் தங்களது கோரிக்கைகளையும் எதிர்ப்பையும் முன்வைத்து மணிப்பூர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மணிப்பூரின் பல மாவட்டங்களில் குக்கி இனத்தவர், மைத்தேயி இனக்குழுவினரை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கினர். இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து கலவர பகுதியாக மாறியது. இந்த மோதல், மியான்மர் எல்லை நகரமான மோரேவுக்கும் பரவியது. இந்த பகுதியில் தான் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே நடக்கும் இந்த மோதலால் தமிழர்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வீடுகளூம் தீக்கிரையாக்கப்பட்டன.
மணிப்பூர் பற்றி எரிய தொடங்கியதால், தற்போது வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இணையசேவை 5 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. அதுபோக இரவு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் கூட்டமாக கூட தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் வன்முறை பாதித்த கிராமங்களில் இருந்து சுமார் 7,500 பேரை மீட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதிக்கப்பட்ட பல இடங்களில் ராணுவம், ரைஃபில் படை வீரர்களின் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் இந்த திடீர் வன்முறை ஏற்பட்டதற்கான காரணங்களை பார்க்கலாம்:
* மணிப்பூரில் தற்போது திடீரென போராட்டத்திற்கு காரணம் அம்மாநில உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவுதான். கடந்த மாதம் மணிப்பூர் மாநிலம் பிறப்பித்த உத்தரவில், மைத்தேயி இன மக்களை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பது குறித்து பாஜக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு அங்குள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. நேற்று மணிப்பூர் அனைத்து மாணவர்கள் அமைப்பு அமைதி ஊர்வலம் நடத்தியது. மணிப்பூரின் 10 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் போது பழங்குடிகளுக்கும் பழங்குடிகள் அல்லாத பிரிவினருக்கும் இடையில் வன்முறை ஏற்பட்டது.
*மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மைத்தேயி இன மக்கள் 53 சதவிகிதம் பேர் வசித்து வருகின்றனர். ஆனால் மாநிலத்தின் மொத்த பரப்பளவில் வெறும் 10 சதவிகிதத்தில்தான் இவர்கள் வசித்து வருகிறார்கள். அதேவேளையில், மணிப்பூர் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் பழங்குடிகள் 90 சதவீத பகுதிகளில் வசித்து வருகிறார்கள். மாநில சட்டப்பேரவையில் மைத்தேயி இனத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள்
*மியான்மர் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் பல்வேறு இடபார்டுகளை எதிர்கொள்வதாகவும் இதனால் தங்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது மைத்தேயி மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதற்கு நாகாஸ், ஸோமிஸ், குக்கி ஆகிய பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
*இவ்விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊர்வலத்தின் போதுதான் மோதல் வெடித்தது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். பழங்குடியின பகுதி மக்கள் இல்லாத பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
*மணிப்பூரில் வன்முறை வெடித்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பிரன் சிங்கை தொடர்பு கொண்டு தெரிவித்தார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வரும் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications