"என்னை கடத்திட்டு போயி".. மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் மனைவி பகீர் வாக்குமூலம்
சில்லாங்: மேகாலயா ஹனிமூன் சென்ற இந்தூர் புதுமண தம்பதி மாயமான நிலையில், கணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் மனைவி சோனம் அளித்துள்ள வாக்குமூலம் பகீர் கிளப்புகிறது.
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கு, சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் திருமணமானது. திருமணமான 10 நாட்களிலேயே இந்த தம்பதி மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கு ஒரு ஹோம் ஸ்டே விடுதியில் அவர்கள் தங்கியிருந்தனர். கடந்த மே 23 ஆம் தேதி அந்த ரூமை செக் அவுட் செய்தனர்.

அன்றைய தினமே அவர்கள் இருவரும் மாயமாகிவிட்டனர் . உறவினர்கள் பதறியடித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் மேகாலயா காவல்துறையினர் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே கடந்த 2 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மறுபக்கம் ரகுவன்ஷி மனைவி சோனம் நிலை குறித்து தெரியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபூர் அருகே உள்ள தாபாவில் சோனமை காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக கணவனின் கொலையில் பங்கிருப்பதாக சோனமும் கைது செய்யப்பட்டார்.
சோனமுக்கு மத்தியப்பிரதேசத்தில் அவருடன் பணியாற்றிய ராஜ் குஷ்வஹா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜ் கூலிப்படை ஏவி ரகுவன்ஷியை கொலை செய்ததாகவும், அதற்கு சோனம் பக்க பலமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையில் சோனம் அளித்துள்ள வாக்குமூலமும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேகாலயா காவல்துறையினர் கூறுகையில், "மொத்தம் 3 டீம்களாக பிரிந்து உத்தரப்பிரதேசத்தில் ஒரு குழுவும், மத்தியப்பிரதேசத்தில் ஒரு குழுவும், மேகாலயாவில் ஒரு குழுவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். உத்தரப்பிரதேச காவல்துறையினர் சோனமிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ராஜ் குஷ்வஹா உள்ளிட்ட கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டதால், அவர் பயத்தில் காசியாபாத் தாபாவில் அழுதபடி நின்றுள்ளார்.
மேலும் காவல்துறையினரிடம், நான் மேகாலயாவில் இருந்து கடத்தப்பட்டேன். அங்கிருந்து என்னை கடத்தி இங்கு கொண்டு வந்து விட்டு சென்றுவிட்டனர். உண்மையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவள் நான் தான். நான் குற்றவாளி எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார். அவரை உத்தரப்பிரதேசத்தில் இருந்து மேகாலயாவுக்கு அழைத்து வந்து விசாரித்தால் தான் முழு தகவல் தெரிய வரும்." என்றனர்.
சோனமின் அப்பா தேவி சிங் கூறுகையில், "இரு வீட்டாரும் பேசி அவர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளோம். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து 3 மாதங்களுக்கு பிறகு தான் திருமணம் நடைபெற்றது. கணவன் கொலை வழக்கில் சோனம் மீது பழிசுமத்துவதில் துளி கூட உண்மை இல்லை.
இந்த கொலை வழக்கில் காவல்துறையினரால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் என் மகள் மீது பழி போட்டு வழக்கை முடிக்க பார்க்கிறார்கள். எந்த விசாரணையும் நடத்தாமல் எப்படி என் மகள் தான் கொலை செய்தாள் என்ற முடிவுக்கு வந்தனர். மேகாலயா முதல்வர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது." என்றார்.
சோனம் அம்மா சங்கீதா கூறுகையில், "என் மகள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. அவள் கிடைத்துவிட்டாள் என்று போன் வந்தது. உடனடியாக அவள் மீது பழி சுமத்தி கைதும் செய்துவிட்டோம் என்கிறார்கள். என் மகள் விருப்பப்பட்டு திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருந்தாள். இதில் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை நடக்கட்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications