தன்னை பற்றி சர்ச்சையாக பேசிய முன்னாள் அமைச்சர்.. தரமான பதிலடி கொடுத்த நடிகை ரோஜா
திருப்பதி: தன்னை பற்றி சர்ச்சையாக பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்திக்கு எதிராக நடிகை ரோஜா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா இருக்கிறார்.

கடந்த மாதம் நடிகை ரோஜா குறித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை விமர்சித்துக் கொண்டிருந்த அவர், திடீரென ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து மிகவும் மோசமான முறையில் அவதூறாக பேசினார். நடிகை ரோஜா ரெக்கார்டு டான்ஸ் ஆடியவர் என்றும், அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்றும் அவருடைய ஆபாச படங்கள் என்னிடம் உள்ளன, அவற்றை நான் வெளியிடுவேன் என்றும் பேசினார்
இது பெரும் சர்ச்சையான நிலையில், திரையுலகினரும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை ரோஜாவின் நெருங்கிய தோழியான நடிகை ராதிகா பேசுகையில், "ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல் தலைவராக ரோஜாவின் தைரியம் எனக்கு தெரியும். ரோஜாவுக்கு எதிராக தரம் தாழ்ந்த அரசியல் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அது மிகவும் வருத்தமளிக்கிறது.
அண்மையில் தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பெண்கள் கல்வியில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஒரு பங்காக உள்ளனர். சமூகத்தின் ஒற்றுமையில் பெண்களும் ஒரு தூணாக உள்ளனர். இந்த நிலையில் பெண் குறித்த அவதூறான அரசியல் கருத்து அசிங்கமாக உள்ளது. இந்தியாவில் பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் நிலையில் இதுபோன்ற அவதூறான விமர்சனங்கள் அசிங்கமாக உள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.
பண்டாரு சத்யநாராயண மூர்த்தியின் கருத்தால் கலங்கிப்போன ரோஜா, 'ஒரு முன்னாள் அமைச்சர், என்னைப் பற்றி இவ்வளவு மோசமாகப் பேசியிருக்கிறார். அவர் வீட்டிலும் மனைவி, மகள், மருமகள்கள் இருக்கிறார்கள் என்பதை அவரும் நினைவில் வைத்து பேச வேண்டும். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தால் இப்படியெல்லாம் பேசுவீர்களா? என கண்ணீருடன் கேள்வி எழுப்பினார். இதனிடையே ரோஜாவை விமர்சித்ததற்காக பண்டாரு சத்யநாராயணா கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணா, நகரி தொகுதி பொறுப்பாளர் காலி பானு பிரகாஷ் ஆகியோர் மீது நகரி கோர்ட்டில் ரோஜா மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதற்காக நேற்று கோர்ட்டுக்கு வந்த ரோஜா, நீதிபதி முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
பின்னர் ரோஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் பயந்து அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என நினைத்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடர்ந்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" இவ்வாறு ரோஜா கூறினார்.












Click it and Unblock the Notifications